×

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை தந்தம் பறிமுதல்: முக்கிய ஏஜென்ட் உள்பட 3 பேர் கைது

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழக்கரை அடுத்த சிவகாமிபுரம், மீனவர் குப்பம், புதுநகர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மெரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை கடற்கரை சாலை மாதா கோயில் அருகில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்றிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் 4 கிலோ எடை கொண்ட 2 பெரிய யானை தந்தங்கள் இருந்தன. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த காதர் பாட்சா(27), சாயல்குடியை சேர்ந்த ஹரிகுமார்(28) என தெரியவந்தது. யானை தந்தத்தை ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே காவாகுளத்தை சேர்ந்த ஸ்ரீராம்(26) என்பவர் விற்பனை செய்வதற்காக கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து காதர்பாட்சா, ஹரிகுமார், ஸ்ரீராம் ஆகிய மூவரையும் கைது செய்து ராமநாதபுரம் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

காவாகுளத்தை சேர்ந்த ஸ்ரீராம் இலங்கைக்கு கடல் வழியாக கடல் குதிரை, யானை தந்தம், சுறா துடுப்பு போன்ற பொருட்களை கடத்தும் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது பிடிபட்டுள்ள யானை தந்தங்களும் இலங்கைக்கு கடத்துவதற்காக கீழக்கரை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Sri Lanka ,Ramanathapuram ,Sivagamipuram ,Meenavar Kuppam ,Pudunagar ,Keezhakkarai ,Keezhakkarai Beach Road Mata Koil… ,
× RELATED சேலம் அதிமுக பிரமுகரின் மகள் கொலையில்...