மும்பை: பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.7.12 லட்சம் கோடியை இழந்தனர். இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடனேயே துவங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 85,625 புள்ளிகளில் துவங்கியது. 84,875 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக முடிவில் 610 புள்ளிகள் வரை சரிந்து 85,103 ஆக இருந்தது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 226 புள்ளிகள் சரிந்து 25,960 புள்ளிகளானது.
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.7,12,514.68 கோடி சரிந்து, ரூ.4,64,19,108.91 கோடி ஆனது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி மாற்றம் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்க உள்ளது. மேலும், இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றனர். லாப நோக்கத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்கத் துவங்கினர். இதன் காரணமாக பாரத் எலெக்ட்ரானிக்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ்,அதானி போர்ட், பவர் கிரிட், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. ரூபாய் மதிப்பு மீண்டும் ரூ.90 ஐ தாண்டி, ரூ.90.09 ஆனது.
