×

ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ.67.76 கோடியில் கட்டுமான பணி தீவிரம்

ஈரோடு,ஜன.17:  ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ.67.76 கோடியில் 8  அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இதனை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை 1955ம் ஆண்டு அப்போதைய தமிழக  முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1960ம் ஆண்டு 2 தளத்துடன்  கட்டுமான பணி நிறைவடைந்து திறக்கப்பட்டது. இங்கு அவசர சிகிச்சை பிரிவு,  பிரசவ பிரிவு, நுண் கதிர் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, இயன்முறை  சிகிச்சை பிரிவு, எலும்புமுறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு,  காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு  வருகின்றன.   இந்நிலையில், தமிழக சட்டசபையில், 110 விதியின் கீழ், ஈரோடு அரசு  மருத்துவமனையை சூப்பர் ஸ்பெசாலிட்டி (பல்நோக்கு) மருத்துவமனையாக தரம்  உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, இதற்காக ரூ.67.76 கோடி நிதி  ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனையின் பின்புற வளாகத்தில் 8 மாடிகள் கொண்ட  கட்டிடம் கட்டுமான கடந்த ஆண்டு பூமி பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்த கட்டிட  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை ஈரோடு  கலெக்டர் கதிரவன் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணியினை விரைந்து  முடிக்கவும் அமைச்சர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். இதில், எம்எல்ஏ.,க்கள்  ராமலிங்கம், தென்னரசு மற்றும் அரசு மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

Tags : Erode Government Hospital ,
× RELATED ஈரோடு அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 18 பேர் படுகாயம்