×

கால்நடைகளுக்கு அளவான பொங்கல் கொடுத்தால் அமில நோயிலிருந்து பாதுகாக்கலாம்

நத்தம், ஜன. 13: திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை முன்னாள் இணை இயக்குநர் ராஜேந்திரன் கூறியதாவது: மாட்டு பொங்கல் பண்டிகையின்போது, விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு பொங்கல், பச்சரிசி சாதம், கரும்பு மற்றும் பழங்களையும் சேர்த்து உண்ண கொடுப்பது வழக்கம். அவ்வாறு கொடுக்கும் போது சிலர் அளவுக்கு அதிகமாக கொடுத்து விடுகின்றனர். இப்படி கொடுப்பதால் மாடுகளுக்கு அமில நோய் ஏற்படும். இதன் காரணமாக கால்நடைகளின் வயிற்றில் ரூமன் எனப்படும் பாக்டீரியா கிருமிகள் பெருகி காரத்தன்மை குறைந்து அமில தன்மை அதிகரிக்கும். இதனால் புளிப்பு தன்மை ஏற்பட்டு லாக்டிக் அமிலம் ஏராளமாக சுரந்து ரத்தத்தின் தன்மையை மாற்றி விடும். இதனால் மாடுகள் தீவனம் சாப்பிடாது. உடலில் நீர் இழப்பு ஏற்படும். வயிறு உப்புசம் ஏற்பட்டு கால்நடைகள் மிக மோசமான நிலையை அடையும். இந்நோய் கண்ட மாடுகளுக்கு சோடா உப்பு 200 கிராம் கொடுக்கலாம். குளோர் டெட்ரா சைக்கிளின் மாத்திரைகள் தரலாம். நிலைமை மோசமாக இருந்தால் தாமதம் செய்யாது உடனே கால்நடை டாக்டரிடம் காட்ட வேண்டும். பொங்கல் பண்டிகையின் போது தங்கள் கால்நடைகளுக்கு பொங்கல் போன்ற விசேஷ உணவு வகைகளை 200 கிராம் வரை கொடுக்கலாம். அளவான பொங்கல் கொடுத்து அமில நோய் ஆபத்திலிருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா