×

குத்தகை பாக்கி செலுத்தாததால் வருவாய்துறை நிலம் மீட்பு

பந்தலூர்,  ஜன. 13 : பந்தலூர் அருகே முக்கட்டி பகுதியில் வருவாய்துறைக்கு சொந்தமான  இடத்திற்கு குத்தகை பாக்கி செலுத்தாததால் மீட்கப்பட்டதாக வருவாய்துறையினர்  அறிவித்துள்ளனர்.  பந்தலூர் வட்டம் நெலாக்கோட்டை ஊராட்சி  முக்கட்டி அருகே தேயிலை, காபி மற்றும் பங்களா ஆகியவற்றுடன் 30 ஏக்கர்  நிலத்தை ஆங்கிலேயர் காலத்தில் 1944 ஆண்டு கேரளா மாநிலத்தை சார்ந்த  கோவிந்தன்குட்டி என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.  அவருக்குப்பின்  அவரது மகன் கோபிநாதன் என்பவர் குத்தகை தாரராக இருந்து வந்தார். கோபிநாதன்  இறந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் அவருடைய வாரிசுகள் குத்தகைதாரர்களாக  இருந்து வந்தனர். தற்போது முஸ்தப்பா என்பவர் குத்தகைதாரராக உள்ளார். இவர்  30 ஆண்டாக அரசுக்கு குத்தகை பாக்கியாக ரூபாய் 3.5 கோடி பாக்கி  வைத்துள்ளார்.  குத்தகை பாக்கி தொகையை உடனடியாக செலுத்த  வலியுறுத்தியும் பாக்கி தொகை செலுத்தப்படவில்லை. இதையடுத்து நிலத்தை  வருவாய்துறையினர் கையகப்படுத்த லெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இந்த  நிலம் தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள  நிலையில்  நேற்று முன்தினம் வருவாய்துறை சார்பில் நிலத்தை கையகப்படுத்துவதாக தெரிவித்து கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார்  மற்றும் ஷீஜா ஆகியோர் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் என தெரிவித்து  அறிவிப்பு பலகை வைத்தனர்.

Tags :
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்