×

அரசு விழாவில் தி.மு.க., அதி.மு.க.வினர் அரசியல் பேசியதால் பரபரப்பு

ஊட்டி, ஜன. 13: ஊட்டி பெத்தலகேம் பெண்கள் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாரூதீன் முன்னிலை வகித்தார். விழா மேடையை அதி.மு.க.வினர் பலரும் ஆக்கிரமித்த நிலையில், தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சி தலைவரும் விழாவில் பங்கேற்றார். இதில் அதி.மு.க. மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வினோத் பேசுகையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல் தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமி வரை பல்வேறு திட்டம் கொண்டு வந்துள்ளனர், என்றார். தி.மு.க.வை சேர்ந்தவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ் பேசுகையில், ‘‘அரசு நிகழ்ச்சியான இந்த விழாவில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. இருந்தபோதும், பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க. மட்டும் செய்ததுபோல் பேசி வருகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசும் பல திட்டங்களை செய்துள்ளது’’ என்றார். இதனால் விழா ேமடையில் பரபரப்பு ஏற்பட்டது.  பள்ளி மாணவர்களுக்கு தங்கள் அரசுகள்தான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது என அரசு விழாவில் இரு கட்சி நிர்வாகிகளும் பேசியதால் விழாவில் பங்கேற்ற கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் திகைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி துவக்கி வைத்தவுடன், உடனடியாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags : DMK ,activists ,AIADMK ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...