×

விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதன்மையாக விளங்குகிறது முதல்வர் நாராயணசாமி பெருமிதம்

புதுச்சேரி, ஜன. 13: விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதன்மையாக விளங்குகிறது என முதல்வர் நாராயணசாமி பேசினார்.  புதுச்சேரி அரசு வேளாண் துறை சார்பில் கடந்த சொர்ணவாரி பருவம் 2020 நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது. வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார். சொர்ணவாரி 2020-21 பட்டத்தில் 5,518 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்த 2,836 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 275 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.2 கோடியே 59 லட்சத்து 46 ஆயிரம் மற்றும் ரூ.17 லட்சத்து 72 ஆயிரத்து 800 என மொத்தம் 3,111 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 77 லட்சத்து 18 ஆயிரத்து 800க்கான காசோலை இந்தியன் வங்கி ரெட்டியார்பாளையம் கிளை மேலாளரிடம் வழங்கப்பட்டது. இது, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.  விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. இதை எல்லோரும் சொல்வார்கள், ஆனால் செய்ய மாட்டார்கள். இப்போது மத்தியில் உள்ள அரசும், விவசாயிகள் அரசு எனக்கூறிக் கொண்டு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இச்சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் கடும் குளிர், மழையை பொருட்படுத்தாமல் தங்களை வருத்திக் கொண்டு 2 கோடி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தொடர்ந்து திட்டங்களை செம்மையாக நிறைவேற்றி வருகிறோம். இந்த பெருமை எல்லாம் துறை அமைச்சர், செயலர், இயக்குநர் மற்றும் அதிகாரிகளைத்தான் சாரும். நான் நிதி கொடுப்பது மட்டும் தான்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கெடுக்கும் வகையில் மின்விநியோகத்தை மத்திய அரசு தனியார்மயமாக்க போகிறது. எப்படி இருந்தாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டம் தொடரும். விவசாய விளைநிலங்களுக்கு காப்புறுதி அளிக்கப்படும் என பிரதமர் மோடி இப்போது அறிவிக்கிறார். ஆனால், புதுச்சேரி அரசு, இத்திட்டத்தை ஏற்கனவே தொடங்கி முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதன்மையாக விளங்குகிறது. பட்ஜெட் புத்தகத்தில் 31 பக்கம் விவசாயிகளுக்காகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரியை இணைத்து பல்கலைக்கழகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ.400 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதால், முதற்கட்டமாக ரூ.100 கோடி மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால், இங்குள்ள கவர்னர், அப்படியெல்லாம் சேதம் ஏற்படவில்லை, ரூ.10 கோடி தான் சேதம் ஏற்பட்டுள்ளது என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவரா புதுச்சேரி மக்களை காக்க வந்தவர்? ரூ.400 கோடி கிடைத்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க முடியும். நீங்கள் கேட்காமலே உங்களுக்கு (விவசாயிகள்) உதவிகளை செய்திருக்கிறோம். அதுபோல், நாங்கள் கேட்காமலே எங்களுக்கு நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். வேளாண் துறை செயலர் அன்பரசு பேசினார். முன்னதாக, வேளாண் துறை இயக்குநர் ராமகிருஷ்ணன் என்ற பாலகாந்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் கூடுதல் வேளாண் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இறுதியாக, டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 61 விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags : Narayanasamy ,states ,Puducherry ,India ,
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..