×

சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால் சடலத்துடன் மக்கள் சாலை மறியல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணமராஜிகுப்பம் ஊராட்சி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் ஆனந்தன்(53). உடல் நிலை சரியில்லாத காரணத்தால்  இறந்தார். அவரது உடலை கிராமத்திற்கு அருகில் உள்ள சுடுகாட்டில் புதைப்பதற்காக எடுத்து செல்ல தயாரானது. ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான நிலம் என்று வேலி போட்டு அடைத்தாக கூறப்படுகிறது. இதனால், பிணத்தை எடுத்து செல்ல வழியின்றி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 2 மணிநேரம் பிணத்துடன் காத்திருந்தனர். அப்போது, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை எடுத்து செல்ல வழி ஏற்படுத்தி தராத நிலையில், ஆத்திரமடைந்த அருந்ததியர் 60க்கும் மேற்பட்டோர் இறந்தவரின் சடத்தை தூக்கி சென்று திருத்தணி - பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திர குமார், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சாந்தி உட்பட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “மயானத்திற்கு செல்லும்போது வழியில் விவசாயி ஒருவர் அவருக்கு சொந்தமான நிலம் என கூறி வேலி அமைத்து இருக்கிறார். இதனால், கிராமத்தில் இறந்தவர் பிணத்தை எடுத்து செல்ல வழி இன்றி அவதிப்பட்டு வருகிறோம். இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக மயானத்திற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர்.
காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி கூறியதை ஏற்று சுமார் 2 மணி நேரம் சலடத்துடன் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : road ,crematorium ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...