வேம்படி வினாயகர் கோயிலில் உள்ள குடிநீர் கிணற்றில் செத்து மிதந்த மீன்கள்: ரசாயனம் கலந்த மர்மநபர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்போரூர்: கோயில் குடிநீர் கிணற்றில், மர்மநபர்கள் ரசாயனத்தை கலந்ததால், மீன்கள் செத்து மிதந்தன. இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் இள்ளலூர் சந்திப்பு அருகில் வேம்படி வினாயகர் கோயில் உள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயில் கட்டப்படுவதற்கு முன்பே இந்த கோயில் இருந்ததும், இங்கிருந்தபடி சிதம்பர சுவாமிகள் கந்தசுவாமி கோயிலை கட்டியதும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கோயிலையொட்டி ஏராளமானோர், கோயில் நிலத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிக்கின்றனர்.

கோயிலுக்கு வெளியே இருந்த பொது கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்போரூரில் துவங்கப்பட்ட இந்து அமைப்பு ஒன்று, கோயில் வளாகத்தில் வெளியாட்கள் நுழையக்கூடாது. கிணற்றில் யாரும் தண்ணீர் எடுக்கக்கூடாது என கூறினர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சக்திவேல், அங்கு வந்து பார்வையிட்டு கிணற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், மோட்டார் பொருத்த கூடாது என அறிவுறுத்தினார். இதனால், அந்த பிரச்னை ஓய்ந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோயில் வளாகத்துக்கு வந்த பக்தர்களும், பொதுமக்களும் கோயில் கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்றனர். அப்போது, அதில் இருந்த மீன்கள் செத்து மிதந்தது., கிணற்று நீரில் ரசாயன திரவம் கொட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், செயல் அலுவலர் சக்திவேல் அங்கு வந்து பார்வையிட்டு கிணற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். நிர்வாகத்தின் சார்பில் ரசாயனம் கலக்கப்பட்ட நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு கிணறு சுத்தம் செய்யப்பட்ட பிறகு, பயன்படுத்தலாம் என கூறினார். மேலும், இதுகுறித்து திருப்போரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  பொதுகிணற்றில் நீர் எடுக்க முடியாதபடி ரசாயனத்தை ஊற்றியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>