எஸ்ஆர்எம் கல்லூரி விடுதி அறையில் மருத்துவ மாணவி தற்கொலை

செங்கல்பட்டு: எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கிய மருத்துவ மாணவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் இந்து (27). செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிடிஎஸ் முடித்துவிட்டு, பல் மருத்துவம் மேற்படிப்பான எம்டிஎஸ் படித்து வந்தார். அதே பல் மருத்துவமனை கல்லூரியில் டாக்டராக பணியாற்றி, மாணவர்கள் விடுதி வார்டனாக இருந்தார். நேற்று காலை இந்து, நீண்ட நேரமாக அறையில் இருந்து வரவில்லை. இதனால், அங்கிருந்த ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில், இந்து தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து, மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த மாதம் 11ம் தேதி மாரடைபால் இறந்தார். இதனால் அவர், மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, மருத்துவமனை நிர்வாகத்தின் நிர்ப்பந்தம் காரணமாக தற்கொலை செய்தாரா, ஈவ்டீசிங் பிரச்னையால் இறந்தாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றார்.

கடந்த ஒரு ஆண்டாக, காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரியில் மாணவ, மாணவிகள் 7 பேர் மர்மமான முறையில், மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுபோன்ற சம்பவங்கள், தொடர் கதையாக உள்ளன.

மாணவர்களின் மர்மச்சாவு குறித்து, சென்னை சிபிசிஐடி எஸ்பி தலைமையில் தொடர்ந்து 6 மாதமாக, கல்லூரி நிர்வாகத்தினர், விடுதி வார்டன்கள், மருத்துவம் மற்றும்  பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்பட பலரிடம் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>