வேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

நாகை,ஜன.13: வேளாங்கண்ணியில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்யாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர். புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் செல்லும் பிரதான சாலை கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாகவே உள்ளது. பல முறை வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேளாங்கண்ணி நுழைவு வாயிலில் இருந்து வேளாங்கண்ணி பேராலயம் செல்வதற்குள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்காத வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் வேளாங்கண்ணி முச்சந்தி சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயலாளர் மரியசார்லஸ், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ் மற்றும் கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சேதமடைந்த சாலையை சீர் செய்யாத பேரூராட்சி நிர்வாகம், அதிமுக அரசு ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் 300 பேரையும் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories:

>