×

பெரணமல்லூரில் வங்கியின் ஆமைவேக சேவையால் ஊராட்சி பணிகள் பாதிப்பு ஊராட்சி நிர்வாகத்தினர் புகார்

பெரணமல்லூர், ஜன.12: பெரணமல்லூரில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஆமைவேக சேவையால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.பெரணமல்லூர் பேரூராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பொதுமக்கள் முதல் அரசுத்துறைகள் வரை கணக்குகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஊராட்சி நிர்வாக கணக்குகள் பெரும்பாலும் இந்த வங்கியில் தான் பராமரிக்கப்படுகிறது. ஆனால் இந்த வங்கியின் ஆமைவேக சேவை பணியால், நிர்வாக பணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக ஊராட்சி நிர்வாகத்தினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: பெரணமல்லூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள ஏழு கிராம ஊராட்சிகளின் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஓராண்டாக தலைவர்கள் பதவி ஏற்றது முதல் ஊராட்சி வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நிதிகள் ஒதுக்கியுள்ளது.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் பொதுநிதி மேலாண்மை திட்டத்தின் (பிஎப்எம்எஸ்) கீழ் பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் எந்த ஒரு வரவு, செலவு கணக்கு வங்கிக்கு சென்று தான் பணத்தை கோரமுடியும். இதில் குடிநீர், மின்விளக்கு பராமரிப்பு ஊழியர்களின் சம்பளம் மற்றும் நூறு நாள் திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டப்பணிகள் இவ்விதமாக பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இதில் நாங்கள் போட்டு கொடுக்கும் பில் வங்கிக்கு சென்று குறிப்பிட்ட நபரின் கணக்குக்கு செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கப்படும் பில்கள் அனைத்தும் சுமார் ஒரு வாரம் கழித்து அந்த நபர்களின் கணக்கில் சேர்கிறது. இதனால் ஊராட்சி நிர்வாக பணிகள் தாமதமாகிறது.

இதனால், எங்களால் குறிப்பிட்ட பணியை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். மேலும், எங்களின் சம்பள பில்லினை கொடுத்து அனுப்பினாலும் இதே நிலைமை ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் சம்பளம் வாங்குவதும் திண்டாட்டமாக உள்ளது. இதுகுறித்து நாங்கள் வங்கி மேலாளரிடம் தெரிவித்தால் அவரும் நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் கூறிவிட்டு மெத்தனம் காட்டுகிறார். இதனால் வங்கியின் சேவை ஆமை வேகத்தில் தான் நடைபெறுகிறது. மேலும், வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு செலுத்தும் பில்கள் வேகமாக நடவடிக்கை மேற்கொண்டு, சில மணி நேரத்திலேயே பணம் பரிவர்த்தனை நடந்து முடிகிறது. இதுபோன்ற நிலைமையால், எங்களால் ஊராட்சி பணிகள் சரிவர செய்யமுடியாமல் அவதிக்குள்ளாகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Panchayat administration ,Peranamallur ,
× RELATED காவிரி குடிநீர் விநியோகம் செய்ய...