×

தூத்துக்குடியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்

தூத்துக்குடி, ஜன. 12: தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதி, திருச்செந்தூர் ரோடு, தபால் தந்தி காலனி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை, குரூஸ் பர்னாந்து சிலை பகுதி, டபிள்யூஜிசி ரோடு, டூவிபுரம் மெயின்ரோடு அண்ணாநகர் முதல்தெரு, அரசு ஊழியர் குடியிருப்பு, போல்டன்புரம், ராமசாமியாபுரம், முதன்மைக்கல்வி அலுவலகம், தாலுகா அலுவலகம் பகுதி, அந்தோணியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஜார்ஜ் ரோடு, மறக்குடி தெரு, முத்தையாபுரம், சூசைநகர், அத்திமரப்பட்டி, பிரையன்ட் நகர் 3,4 மற்றும் 5வது தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது.  தூத்துக்குடி மாநகர பகுதியில் திட்டமிடப்படாமலும், மெத்தனமாகவும் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் தூத்துக்குடி மாநகரில் எங்கு பார்த்தாலும் மழை வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றமுடியாத நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி செல்லும் நிலை உள்ளது.

நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூர் 22 மிமீ, காயல்பட்டினம் 31மிமீ, குலசை 30, விளாத்திகுளம் 2, காடல்குடி 4, வைப்பாறு 19, சூரங்குடி 37, கோவில்பட்டி 1, ஓட்டப்பிடாரம் 24, மணியாச்சி 5, வேடநத்தம் 47, கீழஅரசடி 21,  எட்டயபுரம் 1, சாத்தான்குளம் 16.6, வைகுண்டம் 29, தூத்துக்குடி 35 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது.  தொடர்ந்து பெய்து வரும் மழை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கி போட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்காக லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ள கரும்புகள், மஞ்சள் குலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்க முடியாமல் தேங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : homes ,floods ,Thoothukudi ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை