×

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றக்கோரி போராட்டம்; பாஜ, இந்து அமைப்பினர் 200 பேர் மீது வழக்கு: 9 பேர் கைது: 163 தடை உத்தரவு அமல்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் கடந்த 1ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும். இதற்கு காவல்துறை தரப்பில் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதையொட்டி திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று மாலை பதற்றமான சூழல் நிலவியதால் கோயில் சுற்றுப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் நேற்று மாலை திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபம், கோயில் அலுவலகம், மலைக்கு செல்லும் பாதையான பழனியாண்டவர் கோயில் ஆகிய பகுதிகளில் குவிந்தனர்.

அவர்கள் மலை உச்சி தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோஷமிட்டனர். அதே நேரம் கோயில் தரப்பில், நூற்றாண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டன. இதை தொடர்ந்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நேற்று மாலை 6.10 மணிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில், ‘‘உச்சிப்பிள்ளையார் கோயில் தீபமண்டபத்தில் தான் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘ஏன் நீதிமன்ற தீர்ப்பை அரசுத் தரப்பில் நிறைவேற்ற வில்லை?’’ என்றார். இதற்கு அரசுத் தரப்பில், ‘‘வழக்கம் போல் தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஐகோர்ட் கிளை மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டரை அழைத்து, ‘‘இந்த வழக்கின் மனுதாரருடன் சென்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மேல் தளத்தில் உள்ள தீபமண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுற்று வட்டார கிராமங்களில் வீடுகள் தோறும் தீபம் ஏற்றப்பட்டது. இந்தநிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து அமைப்பினர் 16 கால் மண்டபம் அருகே முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்றப்பட்டது. இந்து அமைப்பினர் தாக்கியதில் 2 போலீசார் காயமடைந்தனர். போலீசாரை தாக்கி விட்டு, மலை மீது ஏற முயன்ற இந்து அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே, மனுதாரரான ராம ரவிக்குமார் ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 50 பேருடன், மலைப்பகுதியில் உள்ள தீபத்தூண் பகுதிக்கு செல்ல முயன்றார்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினரை கலைந்து செல்லுமாறு போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். ஆனாலும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஏராளமான போலீசார் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் பகுதியில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் சட்டம்-ஒழுங்கு நிலை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை பாதுகாத்திடும் வகையில் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக 163 (144) தடை உத்தரவை அமல்படுத்தி கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே போலீசாரின் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்று கலவரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட இந்து அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், 9 பேரை இன்று காலை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Thiruparankundram hill ,BJP ,Hindu ,Madurai ,Rama Ravikumar ,Egumalai ,Usilampatti ,High Court ,Thiruparankundram Subramanya Swamy Temple ,
× RELATED பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுப...