×

விடிய விடிய மழை; பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் புதுவெள்ளம்: வேலூரில் பொதுமக்கள் மகிழ்ச்சி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் பரவலாக பெய்யும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.  இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.  இன்று காலை வரை விடிய விடிய மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தமிழக-ஆந்திர எல்லை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.இதன்காரணமாக வேலூர் பாலாற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. நேற்றிரவு லேசான தண்ணீர் வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பாலாற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடுகிறது. இதையறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆற்றங்கரை மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நின்றபடி வெள்ளத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சிலர் கற்பூரம் ஏற்றியும் தண்ணீரை வரவேற்றனர். தொடர்ந்து பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மேல்ஆலத்தூரில் 51.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம்: குடியாத்தம்-18.6 மி.மீ, காட்பாடி-23.8, பொன்னை-43.6, வேலூர்-20.4, வேலூர் சர்க்கரை ஆலை அம்முண்டி 10.2மி.மீ. இதற்கிடையில் இன்று காலை புதிய பஸ் நிலையம் மற்றும் கிரீன் சர்க்கிள் பகுதியில் தேங்கி இருந்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டர் வாகனம் மூலம் வெளியேற்றினர். மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. …

The post விடிய விடிய மழை; பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் புதுவெள்ளம்: வேலூரில் பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Baladu ,Vellore district ,
× RELATED தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு