இன்று ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் கோயில் வளாகம் 2 டன் பூக்களால் அலங்கரிப்பு

நாமக்கல், ஜன.12: நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், இன்று(12ம்தேதி) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சுவாமிக்கு சாத்தப்படுகிறது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஜெயந்தி விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் பல்வேறு வகையான வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவு வாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களில் 2 டன் சாமந்தி, ஆஸ்டர் வகை பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய ₹250 கட்டணத்தில் சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இலவச நுழைவுவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன் பிறகு வரும் பக்தர்கள் வடைமாலை அலங்காரத்தை காண, அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயந்தி விழாவையொட்டி, கோட்டை சாலையில் வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. நேற்று முதல் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. பக்தர்கள் நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்ய 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>