×

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடின் இன்று டெல்லி வருகை: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

புதுடெல்லி: உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதனால் இந்தியா அதிக லாபம் அடைவதாகவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தக் கோரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார். இதனால் இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

இந்த சூழலில், இந்தியாவின் நீண்டகால நம்பகமான கூட்டாளியாக கருதப்படும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று டெல்லி வர இருக்கிறார். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி வந்ததும் புடினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து வழங்க உள்ளார். இதைத் தொடர்ந்து நாளை 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு நடக்க உள்ளது. உச்சி மாநாடு நடக்கும் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் தலைமையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. குறிப்பாக, இந்தியர்கள் ரஷ்யாவில் பணியாற்றுவதை எளிதாக்குவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் பரந்த கட்டமைப்பின் கீழ் தளவாட ஆதரவு வழங்குவது ஆகியவை முக்கிய ஒப்பந்தங்களாக உள்ளன.

மேலும், இந்த சந்திப்பில் இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக பற்றாக்குறை குறித்த கவலையை மோடி, அதிபர் புடினிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அதிகளவு கச்சா எண்ணெயை வாங்கி வருவதால் அதற்கு ஈடாக ரஷ்யாவும் இந்திய பொருட்களை வாங்குவதை அதிகரிக்க அழுத்தம் தரப்படும் என கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிக வரி விதிப்பால், ரஷ்யாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் இந்தியா விரும்புகிறது. எனவே மருந்து, விவசாயம், உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் ரஷ்யாவிற்கான இந்திய ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, அதிபர் புடினின் இந்த இந்திய பயணத்தை மேற்கத்திய நாடுகளும் உன்னிப்பாக கவனிக்கின்றன. உச்சி மாநாட்டிற்குப் பிறகு ஜனாதிபதி முர்முவை சந்திக்கும் அதிபர் புடின் இரவு 9.30 மணி அளவில் ரஷ்யாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவரது வருகையையொட்டி டெல்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்கு பாதுகாப்புடன் மோப்ப நாய்கள், சிசிடிவி கேமரா, டிரோன்கள், ஏஐ உள்ளிட்டவை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதிபர் புடினின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட, அவரது உயர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 50 அதிகாரிகள், வீரர்கள் டெல்லிக்கு முன்கூட்டி விரைந்துள்ளனர். அதிபர் புடின் பயணிக்கும் அனைத்து பாதைகளும் பாதுகாப்பு படையினரின் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடைசியாக புடின் கடந்த 2021ல் இந்தியா வந்துள்ளார்.

 

Tags : US ,President Putin ,Delhi ,New Delhi ,India ,Russia ,Ukraine ,war ,President ,Trump ,India… ,
× RELATED உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து...