புதுடெல்லி: புகையிலை உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் அதிகபட்சமாக 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, விரைவில் ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் நீக்கப்பட உள்ளது. இதனால், புகையிலை உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி குறையும். இதை தடுக்க ஒன்றிய கலால் வரி திருத்த மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மூலம் உற்பத்தி செய்யப்படாத புகையிலைக்கு 60 முதல் 70 சதவீத கலால் வரியும், சிகரெட் மற்றும் சுருட்டுகளுக்கு 25 சதவீதம் அல்லது 1000 எண்ணிக்கைக்கு ரூ.5000 கலால் வரியும் விதிக்கப்படும். இதன் மூலம் புகையிலை பொருட்களின் பயன்பாட்டை குறைக்க, அதன் விலை குறையாமல் வைத்திருக்க முடியும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், ‘‘ஒன்றிய கலால் வரி மசோதா பொது சுகாதார பிரச்னைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அரசு கருவூலத்தை நிரப்புவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் அம்சங்கள் தவறானவை. ஜிஎஸ்டி தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார்.இந்த மசோதா நாட்டின் கிராமப்புறங்களில் இருக்கும் பீடி தொழிற்சாலைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என ஆர்ஜேடி எம்பி சுதாகர் சிங் கூறினார். தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, ‘‘இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தை அறிய விரும்புகிறேன். தடை இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் எல்லா இடங்களிலும் குட்கா கிடைக்கிறது. அப்படியெனில் வரிகளை அதிகரிப்பதா அல்லது இந்த பொருட்களை தடை செய்வது சிறந்ததா?’’ என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், ‘‘புகையிலை பயன்பாட்டை எவ்வாறு குறைப்பது, புகையிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை எவ்வாறு மற்ற துறைகளுக்கு இடம்பெயர்ப்பது என்பதுதான் இங்குள்ள கேள்வி’’ என்றார். விவாதத்தில் பங்கேற்ற சில எம்பிக்கள் சிகரெட் பழக்கம் உடலுக்கு கடுமையான தீங்கு என டாக்டர்கள் எச்சரித்த போதிலும் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதாக வெளிப்படையாகவும் கூறி வருத்தப்பட்டனர். எதிர்கட்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘இது கூடுதல் வரி கிடையாது. ஏற்கனவே அமலில் உள்ள அதே அளவு வரியை உறுதி செய்வதாகும். இந்த வரிப்பணத்தை முழுமையாக ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளாது. மாநில அரசுகளுக்கான பங்கை பிரித்து கொடுக்கும்’’ என்றார். இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
