புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக 3 கேள்விகளை கேட்டிருந்தார். அந்த கேள்விகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதிலளித்திருந்தது. இது குறித்து ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். அதன் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. உறுதியான கட்டமைப்பு, காலக்கெடு திட்டம், நாடாளுமன்றத்தில், பொதுமக்களுடன் உரையாடல் இல்லை. பல மாநிலங்களில் வெற்றிகரமான சாதி கணக்கெடுப்புகளின் உத்திகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் அரசும் விரும்பவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடி அரசின் இந்த நிலைப்பாடு நாட்டின் வெகுஜன மக்களுக்கு வெளிப்படையான துரோகமாகும்’’ என கூறி உள்ளார்.ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில், ‘‘ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்னர் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்கள் உள்ளிட்டோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு வினாக்கள் இறுதி செய்யப்படுகிறது. முந்தைய கணக்கெடுப்பில் கற்றுக்கொண்டவை அடுத்த பயிற்சியில் கருத்தில் கொள்ளப்படுகின்றன’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
