×

புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை

சென்னை: டிட்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 16.10.2025 அன்று துவங்கி அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருவதுடன், அக்டோபர் மாதம் நிலவிய மோன்தா புயல் மற்றும் தற்போதைய டிட்வா புயல் காரணமாக கனமழை மற்றும் அதி கனமழையாக இதுவரை 10 சதவீதம் கூடுதலாக மொத்தம் 401.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 68,226 எக்டர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். அப்போது, வருவாய் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து டிசம்பர் மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிர் வாரியான தெளிவான அறிவுரைகளை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், பூச்சி, நோய் தாக்குதலை தொடர்ந்து கண்காணித்து, பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், இதுபோன்ற இயற்கை இடற்பாடுகள் நிகழும் நேரங்களில் விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு உதவிடவும் கேட்டுக்கொண்டார். விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதுமான அளவு யூரியா இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும், மறு பயிர் செய்வதற்கு தேவையான விதைகள், பூச்சி, நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றிட பயிர் பாதுகாப்பு மருந்துகளை இருப்பு வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட அலுலவர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவர்களுக்கு தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மைத்துறை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,M.R.K. Panneerselvam ,Chennai ,Welfare ,Titva ,Tamil Nadu ,North-East… ,
× RELATED 3 ஏடிஜிபி, 7 ஐஜி, 3 டிஐஜி, 15 எஸ்பி, 2 கூடுதல்...