லேப்டாப் கேட்டு மாணவிகள் மறியல்

அம்பத்தூர்: அம்பத்தூர் வெங்கடாபுரம் வடக்கு பூங்கா தெருவில் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. மாணவிகள்  பலமுறை பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.  தற்போது அந்த மாணவிகள், 700க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டனர்.  இதன்பிறகும் லேப்டாப் வழங்கவில்லை என்றதும் விரக்தியடைந்த மாணவிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை பள்ளியின் முன்பு திரண்டனர். திடீரென அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டதுடன் சாலையில் அமர்ந்து போராட்டமும்  நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஆசிரியர்கள் வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவிகள், “எங்களுக்கு லேப்டாப் வழக்குவதாக கல்வித்துறை அதிகாரிகள் நேரில்  வந்து பேசினால்தான் கலைந்து செல்வோம்” என்று திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்தியன்,  உதவி கமிஷனர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் வந்து மாணவிகளின் பிரதிநிதிகளை 5 பேரை அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டரிடம் அழைத்து சென்றனர்.  அப்போது அவர் பொங்கல் முடிந்ததும் கல்வித்துறை அமைச்சரிடம்  பேசி அனைவருக்கும் லேப்டாப் வழங்குவதாக உறுதி அளித்தார். இதன் பிறகு மாணவ பிரதிநிதிகள் போராட்டம் நடத்திய சக மாணவிகளிடம் தகவலை தெரிவித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>