×

பூண்டி கலைவாணன் பேச்சு கோட்டூர் அருகே சூறாவளியுடன் கனமழை: 30 வீடுகள் சேதம்


மன்னார்குடி, ஜன. 12: கோட்டூர் ஒன்றியத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது. இயற்கை சீற்றங்களால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வேதனையில் உள்ளனர். இந்நிலையில், கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட 57 குலமாணிக்கம் ஊராட்சிக் குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிராமத்தில் தொடர் மழை காரணமாக வேலை வாய்ப்பின்றி கிராம மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் இக்கிராமத்தில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த திடீர் சூறாவளி காற்றால் நாக ராஜன், அறிவழகன், காந்திராஜா, ராமய்யன் உள்ளிட்ட 30 நபர்களுக்கு சொந்த மான கூரை, ஓடு மற்றும் அரசு தொகுப்பு வீடு, தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தூக்கி வீசப்பட்டன. எராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தது. 5க்கும் மேற்பட்ட ஆடுகள் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், பிடிஓக்கள் சாந்தி, முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா, சிபிஐ ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, திமுக ஒன்றிய செயலாளர் பாலஞானி, அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜாசேட், ஒன்றிய கவுன்சிலர் சுசிலா ஜெயராமன் ஆகியோர் சம்பத்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவர்களை அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். மேலும் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர்.

Tags : hurricane ,Kottur ,houses ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக...