×

பணி நிரந்தரம் செய்ய கோரி ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சை, ஜன.12: பணி நிரந்தரம் செய்ய கோரி தஞ்சையில் ஒப்பந்த செவிலியர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற மண்டல அளவிலான போராட்டத்திற்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர்கள் தஞ்சை கெமியா, அரியலூர் செல்வி, பெரம்பலூர் சகுந்தலா, கடலூர் சிவகாமி, திருவாரூர் சிவபிரசாத், புதுக்கோட்டை பிரசன்னபிரியா, திருச்சி பழனியம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில தலைவர் கலைச்செல்வி, துணை தலைவர் சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட போட்டி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சுமார் 15 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததும் காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் என பணி நியமன ஆணையில் சுகாதாரத்துறை குறிப்பிட்டது. ஆனால் 6 ஆண்டுகள் கடந்தும் இதுவரை 2300 பேர் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

மிக சொற்ப ஊதியம் வழங்கப்பட்டாலும் ஒப்பந்த தொழிலாளர்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக உயிர்காக்கும் பணியிலும் கொரோனா காலக்கட்டத்தில் எந்தவித தொய்வும் இன்றி சிறப்பாக பணி செய்து வரும் நிலையில் தொகுப்பூதியத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று உடனடியாக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் களப்போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபடுவார்கள் என மாநில தலைவர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்தார். உண்ணாவிரத போராட்டத்தில் திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த செவிலியர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : hunger strike ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரையில் இன்று திமுக உண்ணாவிரத போராட்டம்