கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்வதற்கு முன் கைதான 3 பேரும் தொழிலாளியை கொன்றது தெரியவந்து உள்ளது. பலாத்கார வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்து உள்ளனர். கோவை விமான நிலையம் பின்புறம் காரில் காதலனுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த 20 வயது கல்லூரி மாணவியை மதுரையை சேர்ந்த சதீஷ் (30), இவரது சகோதரர் கார்த்தி (21), உறவினர் குணா (20) ஆகிய 3 பேர் கடந்த மாதம் 2ம் தேதி நள்ளிரவில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். தப்பியோடிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். அண்மையில் போலீசார் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. மாணவி பலாத்கார சம்பவம் நடந்ததற்கு முன்பு 3 பேரும் மாலையில், அன்னூர் செராயம்பாளையம் பகுதியில் காட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, அங்கு வந்த முத்துக்கவுண்டன்புதூர் குரும்பபாளையத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி தேவராஜ்(55) என்பவர் இங்கு மது குடிக்கக்கூடாது, இங்கிருந்து செல்லுங்கள் என கூறி கண்டித்துள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து கட்டை மற்றும் மது பாட்டிலால் தேவராஜை தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இந்த தாக்குதலில் தேவராஜ் உயிரிழந்தார்.
அன்றைய தினம் இரவில்தான் மாணவி பலாத்கார சம்பவமும் நடந்தது என கைதான 3 பேரிடமும் போலீசார் நடத்திய காவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக, தேவராஜ் மனைவி லட்சுமி கடந்த மாதம் 6ம் தேதி கோவில்பாளையம் போலீசில் தனது கணவரை காணவில்லை என புகார் அளித்திருந்தார். அதன் பின்புதான் தேவராஜ் சடலம் செராயம்பாளையம் காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டது. எனவே, இக்கொலை தொடர்பாக மாணவி பாலியல் வழக்கில் தொடர்புடைய 3 பேரிடமும் கோவை மாவட்ட போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு கோவை மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, ஒரு மாதத்திற்குள் அதாவது 3 பேரும் கைதாகி 29வது நாளான நேற்று முன்தினம் போலீசார் 50 பக்க குற்றப்பத்திரிகையை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
* 13 பிரிவுகளில் வழக்கு
போலீசார் தாக்கல் செய்த 50 பக்க குற்றப்பத்திரிகையில், கைதான சதீஷ், கார்த்தி, குணா ஆகிய 3 பேர் மீதும் போலீசார் என்னென்ன பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம்: 324(4) (ஆயுதங்களை பயன்படுத்தல்), 140(3) (கடத்தல்), 309(6) (கொள்ளை முயற்சி), 311 (கடுமையான காயத்தை ஏற்படுத்தல்), 70(1) (கூட்டுப்பாலியல் வன்கொடுமை), 140(4) (இயற்கைக்கு மாறான இச்சை), 115(2) (காயம் ஏற்படுத்தல்), 74 (பெண்ணை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்), 76 (பெண்ணை நிர்வாணமாக்கும் நோக்கத்துடன் தாக்குவது), 127(2) (அடைத்து வைத்தல்) 64(2)(எம்)(கற்பழிப்பு), 111(2)(பி) (கிரிமினல் சதி), 111(4) (திருட்டு) ஆகிய 13 பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
