×

வலுவிழந்த டிட்வா புயலால் இன்றும் மழை நீடிக்கும்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மேலும் வலுவிழந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இந்நிலையில் மாமல்லபுரம் அருகே அது கரையை கடக்கிறது. அதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இலங்கை அருகே உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்தது. பின்னர் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியி்ல் டிசம்பர் 1ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது.

நேற்று காலையில் அது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 120 கிமீ தொலைவிலும் கடலூருக்கு வட கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நெல்லூருக்கு தெற்கு- தென்கிழக்கே சுமார் 190 கிமீ தொலைவிலும், நிலை கொண்டது. குறிப்பாக வட தமிழகம்- புதுச்சேரிக்கு அதன் மையப்பகுதி 25 கிமீ தொலைவில் இருந்தது. பின்னர் அது தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வட தமிழகம்-புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து நேற்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்த நிகழ்வின் காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று காலை முதல் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது பலத்த தரைக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசியது. இதையடுத்து, அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலும் மேலும் வலுவிழந்து நேற்று மாலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி மாமல்லபுரம் அருகே நிலை கொண்டது.

அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரம்- கூவத்தூர் இடையே காற்றழுழுத்த தாழ்வுப் பகுதியின் மையப்பகுதி கரையைக் கடக்கிறது. இது இன்று செங்கல்பட்டு மாவட்டத்தை ஒட்டிய தரைப்பகுதியின் ஊடாக வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வட மாவட்டங்களில் இன்றும் மழை நீடிக்கும். இது தவிர, நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை முதல் மிககனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், வ ட தமிழகத்தில் இன்று காலை முதல் மணிக்கு 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் காற்று வீசும். தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமுரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காலை முதல் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வட தமிழக கடலோரப்பகுதியில் நிலை கொண்டு மெதுவாக நகர்ந்து வந்ததால் நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு இருந்தது. மேற்கண்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றும் மழை நீடிக்கும் என்பதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத் தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இன்று நடக்க இருந்த அண்ணா பல்லைக்கழக செமஸ்டர் தேர்வுகள் சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு இருந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை 7 வரை 132 மிமீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கம் 62 மிமீ, திருநின்றவூர் 26 மிமீ, செங்கல்பட்டு 25மிமீ, புழல் 129 மிமீ, வில்லிவாக்கம் 84மிமீ, நந்தனம் 79மிமீ, அண்ணா பல்கலைக் கழகம் 73மிமீ, தரமணி 63 மிமீ, பூந்தமல்லி 41மிமீ, கொளப்பாக்கம் 38மிமீ, சத்தியபாமா பல்கலைக் கழகம் 35மிமீ, மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Tiruvallur ,Chengalpattu ,Bay of Bengal ,Mamallapuram ,Chennai Meteorological Department… ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா