×

நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு தேர்தல் சீர்திருத்தம் பற்றி டிச.9ல் விவாதம்: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு

புதுடெல்லி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விவாதம் நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், ஒன்றிய அரசு பணிந்துள்ளது. தேர்தல் சீர்த்திருத்தம் குறித்து வரும் 9ம் தேதி மக்களவையில் 10 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் முதல் நாளிலேயே மக்களவை முடங்கியது.

இந்நிலையில், கூட்டத்தொடரின் 2வது நாளான நேற்றும் எஸ்ஐஆர் விவகாரத்தில் கடும் அமளி நீடித்தது. மக்களவை காலையில் அவை கூடியதும் பூஜ்ஜிய நேரத்தை நடத்த விடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எஸ்ஐஆர் விவாதம் கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை தொடங்கிய 10 நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியதும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘சில கட்சிகளின் உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பது சரியல்ல. உங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. மக்கள் உங்களை நம்ப மறுக்கிறார்கள்.

அதன் கோபத்தை நாடாளுமத்தில் காட்டக்கூடாது. எஸ்ஐஆர் விவகாரம் பற்றி விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால் உடனே நடத்த வேண்டுமென நிர்பந்திக்க கூடாது. வந்தே மாதரம் தொடர்பான விவாதத்திற்கு பிறகு எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்தப்படும்’’ என்றார். இதை எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவையிலும் எஸ்ஐஆர் விவாதம் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, வந்தே மாதரம் தேசபக்தி பாடலின் 150ம் ஆண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பான விவாதத்தை முதலில் நடந்த அரசு விரும்புவதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

‘‘எஸ்ஐஆர் பணி அழுத்ததால் 14 பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அனைத்தையும் விட மிக முக்கிய பிரச்னையாக இருப்பதால் எஸ்ஐஆருக்கு முன்னுரிமை தர வேண்டும்’’ என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் காலக்கெடு நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் கிரண் ரிஜிஜு மீண்டும் கூறியதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். எஸ்ஐஆர் விவகாரத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சி எம்பிக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், ‘‘எஸ்ஐஆர் என்பது தேர்தல் ஆணையத்தின் நிர்வாகம் சார்ந்த விஷயம். அதில் தலையிட முடியாது. தேர்தல் சீர்த்திருத்தம் குறித்த விவாதத்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால் வந்தே மாதரம் குறித்த விவாதத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றார். இதே போல, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அனைத்து கட்சி கூட்டம் மற்றும் அலுவல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் வரும் 8ம் தேதி மக்களவையில் வந்தே மாதரம் 150ம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடர்பான விவாதத்தை நடத்துவது என்றும், அடுத்த நாள் டிச.9 மற்றும் 10ம் தேதிகளில் தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான விவாதம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. வந்தே மாதரம் விவாதத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். இரு விவாதங்களும் முறையே 10 மணி நேரங்கள் நடக்கும் என அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறி உள்ளார். இதன் மூலம் எஸ்ஐஆர் பிரச்னை முடிவுக்கு வந்திருப்பதாகவும், இன்றிலிருந்து நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* மக்கள் பிரச்னையிலிருந்து பிரதமர் மோடி நழுவுகிறார்
ராகுல் காந்தி தனது பேஸ்புக் பதிவில், ‘‘நாடாளுமன்றம் மக்களுக்கு சொந்தமானது என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், மக்கள் நலன் தொடர்பான முக்கியமான பிரச்னைகளைப் பற்றி விவாதத்தில் இருந்து நழுவுகிறார். ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை விட பெரிய பொதுப் பிரச்சினை என்னவாக இருக்க முடியும்? எஸ்ஐஆருக்கு எதிராக இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். ஏழை மக்களின் வாக்குகளை வெட்டி தேர்தல்களை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான ஆயுதமாக எஸ்ஐஆர் உள்ளது’’ என்றார். பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் மோடி அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து எஸ்ஐஆர் மூலம் திருட்டில் ஈடுபடுகின்றன’’ என்றார்.

* எதிர்க்கட்சிகள் போராட்டம்
எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். எஸ்ஐஆருக்கு எதிரான பதாகைகள், பேனரை ஏந்திய எம்பிக்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Tags : Union government ,New Delhi ,Parliament ,Lok Sabha ,
× RELATED கோவாவில் நடந்தது தீ விபத்தல்ல… கொலை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு