×

தா.பழூர் பகுதியில் தொடர் மழையால் சம்பா சாகுபடி பயிர்கள் சேதம்

தா.பழூர், ஜன.12: அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் சரியான நேரத்தில் தண்ணீர் வந்ததால் விவசாய பணியில் விவசாயிகள் மும்முரம் காண்பித்து விவசாயம் செய்தனர். விளைந்து வந்த நெற்பயிர்கள் நல்ல விதத்தில் அறுவடை நிவர்த்தி ஆகும் நல்ல பலன் கிடைக்கும் என நம்பி இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. 2020ம் ஆண்டு நிவர் புயல், புரவி புயல் உள்ளிட்டவை மாறி மாறி தாக்கியதில் ஒவ்வொரு புயலுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பயிர் பாதிப்படைய துவங்கியது. இருப்பினும் ஏதோ கொஞ்சமாவது கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு பனி மற்றும் 2021ம் ஆண்டும் துவக்கத்திலிருந்து மழை விட்டு விட்டு பொழிந்ததால் நன்கு விளைந்து வந்த நெல் வயல்களில் ஒருபுறம் பதர் விளைந்தது. தற்போது 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக மிச்சம் மீதம் இருந்த பயிரும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை.

டெல்டா பாசன பகுதிகளான சாத்தம்பாடி கோவிந்தபுத்தூர், அருள்மொழி, அனைக்குடி, தா.பழூர், காரைக்குறிச்சி, மதனத்தூர், வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், அடிக்காமலை, கூத்தங்குடி, மேலக்குடிகாடு,இடங்கண்ணி, கீழகுடிகாடு, அண்ணன்காரம்பேட்டை, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. அனைத்து ஊர்களிலும் சம்பா பருவத்தில் சரியான நேரத்தில் நடவு செய்த விவசாயிகள் பயிர் நன்கு விளைந்து வருவதை கண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஆனால் கதிர்கள் விலைய துவங்கும் நேரத்தில், மணிகள் பால் பிடிக்கும் பருவத்தில் பருவ மழை பெய்ததால் நெல்மணிகளுக்குள் நீர் இறங்கி பதராக மாறி இருந்தது. மழை விட்ட பிறகு ஒரு சில வயல்களில் ஒரு சில பகுதிகளில் காற்றிலும் மழையிலும் நெற்பயிர் எந்த சேதமும் ஏற்படாமல் தப்பித்து விட்டது என்று விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் அதிக பணி பொழிந்ததால் வயல்களில் கதிர்கள் கருப்பு நிறமாக மாறுவதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் தண்ணீர் வடிந்தால் இருப்பதை அறுவடை செய்து கொள்ளலாம் என்று இருந்த விவசாயிகளுக்கு மேலும் அதிர்ச்சி .

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து போனது. ஏற்கனவே பெய்த மழையில் நெல் பால் கிடைக்காமல் பதராக விளைந்திருந்த நிலையில் மிச்சம் மீதமிருந்த நெல் மணிகளும் தற்பொழுது தண்ணீரில் சாய்ந்து அழுகிப் கொண்டிருக்கின்றன. ஒருபுறம் நெல் மணி மீண்டும் வயல்களிலேயே முலைக்க துவங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை பெற்று தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். வேளாண்மை துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இதுவரை பயிர் சேதங்கள் குறித்து முற்றிலும் முறையான கணக்கு எடுக்கவே இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாயம் ஒட்டுமொத்தமாக பொய்த்து போன நிலையில் தமிழக அரசு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான இடுபொருள் நிவாரண உதவிகள் கிடைக்க தொடர்புடைய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும். இது போன்ற நிலையில் விவசாயிகள் வாழ்வாதாரங்களை உயர்த்த மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dhaka ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!