காரைக்கால் மாவட்டத்தில் 700 கிமீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்கால்கள் தூர் வார நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

காரைக்கால், ஜன.12: காரைக்கால் மாவட்டத்தில் 700 கிலோமீட்டர் தூரத்திற்கு பாசனவாய்க்கால்கள் தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தெரிவித்துள்ளார். காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் அமைந்துள்ள மாதூரில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேளாண் அறிவியல் மைய தலைவர் மற்றும் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா மற்றும் அறிவியல் மைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விதைகள் சம்பந்தமாகவும் விவசாயம் பயிரிடுவது சம்பந்தமாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் கருத்துகளை வேளாண்துறை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகள் கூறுகையில், காளான் வளர்ப்பது குறித்தும் அதை பதப்படுத்தி வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வது குறித்தும் சந்தேகங்களை கேட்டறிந்தனர். மேலும் பருத்தியில் மாவுப்பூச்சி ஏற்பட்டால் எவ்வித மருந்தை தெளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் எறும்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் நோய்தாக்கம் குறையும் என்றும், ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்கினர். மண்புழு உரம் தயாரிப்பதற்கு சுயதவிக் குழுக்களுக்கு கேவிகே மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுயஉதவிக்குழுவினர் தெரிவித்தனர். விவசாயிகள் மேலும் கூறுகையில், தற்போது அறுவடை சீசன் ஆரம்பிக்க உள்ளதால் கேவிகே மூலமாக அறுவை இயந்திரங்கள் வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா பேசும்போது, 700 கிலோமீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படும், அதற்குண்டான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories:

>