×

சாம்பவர்வடகரை காவல் நிலையத்தில் விதிமுறைகளை மீறி மரங்களை வெட்டி கார்டன் அமைப்பு?: தலைமை செயலாளரிடம் பரபரப்பு புகார்

சுரண்டை: சுரண்டை அருகே சாம்பவர் வடகரை காவல்நிலையத்தில் கார்டன் அமைப்பதற்காக விதிமீறி பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சாம்பவர் வடகரையில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. மகளிர் எஸ்ஐ உள்பட இரு எஸ்ஐகள், ஏட்டுகள் உள்ளிட்ட மொத்தம் 15 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த காவல் நிலையத்திற்கு சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பலம், மேல பாட்டாகுறிச்சி, கீழ பாட்டாகுறிச்சி, ஊர் மேலழகியான், வேலாயுதபுரம், துரைசாமியாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குறைகள் தொடர்பாக வந்து செல்கின்றனர். ஆங்கிலேய ஆட்சியிலேயே இக்காவல் நிலையம் செயல்பட்டு வந்த போதும் இங்கு இன்ஸ்பெக்டர் பதவியிடம் உருவாக்கப்படவில்லை. இதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்க்குடி காவல் நிலைய ஆய்வாளரே கூடுதல் பொறுப்பாக இந்த காவல் நிலையத்தையும் கவனித்து வருகிறார். இதனிடையே புராதன கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த காவல் நிலையம் சமீபத்தில் புணரமைக்கப்பட்டது. இதற்காக காவல்நிலைய வளாகத்திலிருந்த பழமை வாய்ந்த மரங்களை விதிகளை மீறி வெட்டி அகற்றி கார்டன் அமைக்கப்பட்டதாகவும், இதற்காக பெரும் தொகை காவல்நிலைய உயரதிகாரிகளுக்கு கைமாறியதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் பெயரில் உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில், சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் 70 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்திருந்த வாகை மரம், வேம்பு, புளிய மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டி டெண்டர் விடாமல் தனியாருக்கு விற்பனை செய்து முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் அரசுக்கு ரூ.48 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய சாம்பவர்வடகரை காவல் நிலைய எஸ்ஐ செல்வி மற்றும் ஜோசப் சேட்டன் ஆகிய இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினரே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்ஐ செல்வி கூறுகையில், ‘‘காவல் நிலையத்தில் உள்ள ஓடுகள் அனைத்தும் உடைந்தும், பறவைகளின் எச்சங்கள் நிறைந்தும் காணப்பட்டதால் துர்நாற்றம் வீசியது. இதனால் காவல் நிலையம் வர மக்கள் அச்சப்பட்டனர். மேலும் கொரோனா  பரவலை தடுக்க அனைத்து காவல் நிலையங்களையும் தூய்மையாக வைத்திருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியே காவல் நிலையம் முன்பிருந்த மரங்களை வெட்டி கார்டன் அமைத்துள்ளோம். பழமை மாறாமல் இருப்பதற்காக ஓடுகளுக்கு வண்ணம் தீட்டி உள்ளோம் அனைத்தும் முறைப்படி அனுமதி வாங்கியே செய்யப்பட்டது. எனவே, இதுவிஷயத்தில் எந்தவொரு விதிமீறலும் இல்லை’’ என்றார்.இடைத்தரகர்கள் ஆதிக்கம் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ‘‘பழமை மாறாமல் காவல் நிலையம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இருப்பினும் சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், அடிதடி மோதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதுவிஷயத்தில் தலையிடும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….

The post சாம்பவர்வடகரை காவல் நிலையத்தில் விதிமுறைகளை மீறி மரங்களை வெட்டி கார்டன் அமைப்பு?: தலைமை செயலாளரிடம் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Garden Organisation ,Chief Secretary ,chambhawar vandal ,Garden Organization ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...