×

திரளான பக்தர்கள் தரிசனம் நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வாழ்த்து மடல் அட்டைக்கான மவுசு குறைந்து விட்டது

க.பரமத்தி, ஜன.11: நவீன தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் வாழ்த்து மடல் அட்டைகளுக்கான மவுசு குறைந்து விட்டதாக அச்சக தொழிலாளிகள், சிறு கடை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த 24ஆண்டுகளுக்கு முன் தீபாவளி பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து அட்டைகள் மக்கள் அனுப்புவது மிகவும் பிரபலமாக இருந்தது. பல வண்ணங்களில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், கோயில்கள், தெய்வங்கள், இயற்கை காட்சிகள், பறவைகள், விலங்குகள் என பல்வேறு படங்கள் அச்சிட்ட அட்டைகள் சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை மிகவும் மும்முரமாக விற்பனையாவது வழக்கம்.

கடந்த தலைமுறையினரின் வாழ்க்கையில் இது இன்றியமையாத இடத்தை பெற்றிருந்தது எனலாம். பொங்கல் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே வாழ்த்து அட்டைகளை வாங்கி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அஞ்சலில் அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வது வழக்கம். வாழ்த்து அட்டை பெற்றவர்கள் மீண்டும் நன்றி அட்டைகளை வாங்கி அனுப்பி மகிழ்வர். சிறு கடை முதல் பெரிய கடைகள் வரை வாடிக்கையாளர்கள் முகவரிகளுக்கு வாழ்த்து மடல் அட்டைகளுக்களை அனுப்புவர். இதன் மூலம் கடைகாரர்கள் அச்சிடுவோர் என பல்வேறு தரப்பினர் பெருமளவில் பயன் பெற்று வந்தனர். அந்த காலம் தற்போது மாறி விட்டது எனலாம்.

தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியால் இந்த வாழ்த்து அட்டைகள் ஏறத்தாழ மறைந்தே போய் விட்டது. செல்போன், எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், பேஸ் புக், டுவிட்டர் என்று நினைத்த விநாடியில் தொடர்பு கொள்ளக்கூடிய அபரிமிதமான தொழில் நுட்ப வளர்ச்சி சாத்தியமானது.ஒரு வகையில் அட்டைகளை தேர்வு செய்ய கடை, கடையாக ஏறி இறங்கும் நேரம் மிச்சமாகிறது எனலாம். மேலும் மிக எளிதாக அனைவருக்கும் வாழ்த்துகளை அனுப்பவும் முடிகிறது. இது குறித்து பொதுமக்கள் சிலரிடம் கேட்ட போது ஒரு காலத்தில் வாழ்த்து அட்டை அனுப்புவது அவ்வளவு சுவாரஸ்யமானதாக இருக்கும்.

வாழ்த்து பெற்றவர்கள், வாழ்த்தியவர்களின் நினைவாக எத்தனை ஆண்டுகளானாலும் மறக்காமல் அதனை பாதுகாத்து வைத்துக் கொள்வர். தற்போது தகவல் தொடர்பு வசதி மேம்பட்டதால் பல லட்சம் கிமீ. தூரத்தில் உள்ளவர்களிடமும் நேரடியாக கணினி, மொபைல் மூலம் அவர்களின் முகத்தை பார்த்துக் கொண்டே பேசி, வாழ்த்துக்களை தெரிவிக்க முடிகிறது. கடந்த தலை முறையினரின் பல்வேறு நினைவுகளில் இந்த வாழ்த்து அட்டை முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது முற்றிலும் இல்லாதது வருத்தமாக உள்ளது என்றனர்.

இருப்பினும் பொங்கலுக்குக்கான சிறப்பு பொருட்களை விற்பனை செய்யும் சில கடைகளில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்த்து அட்டைகளை இப்போதும் விற்பனைக்கு வைத்திருக்கின்றனர். இருப்பினும் இவற்றை வாங்கி அனுப்புவதில் யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்பதும் தெரிகிறது. பிடித்த கார்டுகளை கடை, கடையாக அலைந்து தேடி வாங்கி வந்து, ஸ்டாம்பு ஒட்டி அனுப்புவதை விட இருந்த இடத்திலிருந்து சுலபமாக வாழ்த்துகளை அனுப்புவதையே பலரும் விரும்புகின்றனர். இதனால் வாழ்த்து மடல் அட்டைகளுக்கான மவுசு குறைந்து விட்டதாக அச்சக தொழிலாளிகள், சிறு கடை வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags : Crowds ,Devotees ,
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...