×

விருதுநகர் ஆசிரியை வீட்டில் 60 பவுன் மாயம்

விருதுநகர், ஜன.12:  விருதுநகர் பி.பி.வையாபுரி தெருவை சேர்ந்தவர் சுதாதேவி(41), இவர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணியில் உள்ளார். கணவரை பிரிந்து மகன் ஐஸ்வர்ராஜா(18) உடன் வசித்து வருகிறார். வீட்டு பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகையை கடந்த டிச.13ம் தேதி பார்த்துள்ளார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த இவரின் தோழி கண்ணகி ரூ.2லட்சம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை, நகையை அடமானம் வைத்து தருவதாக தெரிவித்துள்ளார். நகையை அடகு வைப்பதற்காக நேற்று பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 60 பவுன் நகையை காணவில்லை. இது தொடர்பாக மேற்கு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் மோப்பநாய், கைரேகை பிரிவு அலுவலர்கள் உதவியுடன் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மது விற்ற 8 பேர் கைது
சாத்தூர் அருகே வீரபாண்டியபுரம் பட்டாசு கடை பின்புறம் மது விற்ற வன்னிமடை கிராமத்தை சேர்ந்த தங்கவேல்(61),சாத்தூர் அண்ணாநகர் எடைநிலையம் அருகில் வைத்து மது விற்ற குணசேகரன்(55), ரயில்வே பீடர் ரோட்டில் மது விற்ற கனஞ்சம்பட்டி ஜெயராமன்(53),  வடக்குரதவீதியில் மது விற்ற சாத்தூரை சேர்ந்த மாரிமுத்து(40) ஆகியோரை கைது செய்த சாத்தூர் டவுன் காவல்நிலைய போலீசார், அவர்களிடமிருந்து 162 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருக்கன்குடி ஆற்றுபகுதியில் மதுவிற்ற ஆறுமுகம்(49), அன்பின்நகரத்தில் வீட்டின் பின்பு மதுவிற்ற செல்வராஜ்(49) ஆகியோரை கைது செய்த இருக்கன்குடி மற்றும் ஏழாயிரம்பண்ணை போலீசார், அவர்களிடமிருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிவகாசி உட்கோட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்ற  ஜெகநாதன்(52), கருப்பசாமி(60), ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 19 மதுபாட்டில்கள், 100ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பறிமுதல்
ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய எஸ்ஐ ராமசாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பனம்பட்டி விலக்கு கஞ்சா விற்பனை செய்த அன்பின்நகரத்தை சேர்ந்த ஜீவானந்தம்(56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இளம்பெண் மாயம்
விருதுநகர் ஆனைக்குழாய் தெருவை சேர்ந்த ஆனந்தவள்ளி(45). கணவர் இறந்த நிலையில், தனது மூன்றாவது மகள் முனீஸ்வரி(19) என்பவருடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார். முனீஸ்வரி 8ம் வகுப்பு படித்துள்ள நிலையில், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பேன்சி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 8ம் தேதி காலை வேலைக்கு சென்ற முனீஸ்வரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காதால், மேற்கு போலீசில் ஆனந்தவள்ளி அளித்த புகாரின் பேரில், இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருடிய 2 பேர் கைது
சிவகாசி அருகே திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கரேஸ்வரி (50). இவர் வீட்டில் கதவினை திறந்து வைத்து வெளியில் சென்றிருந்த போது மர்ம நபர்கள் உள்ளே புகுூநது  6 கிராம் மதிப்புள்ள தங்க தோடுகள், பித்தளை குத்து விளக்கினை திருடி சென்றனர். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்த செல்வம்(24), இருதயராஜ் (26) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : home ,teacher ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...