×

முழுமையாக பஸ்கள் வராததால் வாகன நிறுத்தும் இடமாக மாறிய வத்திராயிருப்பு பஸ்ஸ்டாண்ட்

வத்திராயிருப்பு, ஜன. 12:  வத்திராயிருப்பு பஸ்நிலையம் திறக்கப்பட்டு 18 ஆண்டுகளாகியும்  முழுமையாக செயல்படாமல் உள்ளது. ஒன்றிரண்டு பஸ்கள் தவிர மற்ற பஸ்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. இதனால் பஸ்ஸ்டாண்டில் உள்ள கடைகளில் வியாபாரம் இல்லையென வியாபாரிகள் புலம்புகின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் பராமரிப்பு இல்லாதால் சாலை குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் பஸ்ஸ்டாண்டிற்குள் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை மூடிக்கிடப்பதுடன் புதர்மண்டிக்கிடக்கிறது. பஸ் ஸ்டாண்டு கடைகள் வழியாக மேற்கூரைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் குடிமகன்கள்  குடித்து கும்மாளமிடுகின்றனர். பஸ்நிலையத்தில் உள்ள சின்டெக்ஸ் வருடக்கணக்கில் செயல்படாத நிலையில் உள்ளது.

ஜெயலலிதா ஆட்சியின் போது தமிழகத்தில் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனிஅறை ஒதுக்கப்பட்டது. வத்திராயிருப்பு பஸ்ஸ்டாண்ட்டில் அந்த அறை பூட்டியே கிடக்கிறது. பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை பழுதடைந்துள்ளது. கழிப்பறையும் பூட்டியே கிடக்கிறது. இதனால் வத்திராயிருப்பு பஸ்ஸ்டாண்ட் வரும் பயணிகள் அடிப்படை வசதிகள் இல்லாது அல்லாடி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் அனைத்தும் சென்று வருவதற்கான ஏற்பாட்டை காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். ஏனெனில் பஸ் ஸ்டாண்டிற்குள் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பஸ்கள் செல்லாததால் தற்போது தனியார் வேன்கள் மற்றும் கார்கள் நிற்கும் இடமாக பஸ்ஸ்டாண்ட் மாறியுள்ளது. எனவே, வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டை சீரமைத்து அனைத்து பஸ்களும் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : bus stand ,parking lot ,non-arrival ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை