×

மலைபோல் குவிந்து கிடக்கும் மனுக்கள் பல ஆண்டுகளாக ஆன்லைன் பட்டா கிடைக்காமல் அல்லல்படும் பொதுமக்கள் கலெக்டர் கவனிப்பாரா?

திருவில்லிபுத்தூர், ஜன.12:  விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு தாலுகாவில் ஆன்லைன் பட்டா கிடைக்காமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் செட்டில்மென்ட் பிரிவு  அலுவலகம் 2013ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. செட்டில்மென்ட் தாசில்தார்  தலைமையின் கீழ் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் சர்வேயர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் நகர் பகுதியில் இருக்கும் நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி ஆகியவற்றிற்கு ஆன்லைனில் ஏற்றப்பட்டு இந்த அலுவலகம் மூலம் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஏற்பட்ட தவறு காரணமாக திருவில்லிபுத்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆன்லைன் பட்டா வழங்கப்படவில்லை.

கடந்த 2013ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் மூலம் பட்டா வழங்கப்படவில்லை.
 இதனால் ஒரு இடத்தை வாங்குபவர் அல்லது விற்பனை செய்பவர் தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் பட்டா கேட்பதால் தங்களுடைய இடங்களை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலையில் உள்ளனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் மற்றும் சில செட்டில்மென்ட் அலுவலகத்தில் இந்த நிலை நீடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் செட்டில்மென்ட் தாசில்தார் மற்றும் ஊழியர்கள் இருந்தாலும் அவர்களால் ஆன்லைன் பட்டாக்களை ஏற்ற முடியாத நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்.

இதனால் ஒவ்வொரு அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக கொடுக்கப்பட்ட மனுக்கள் மற்றும் சான்றிதழ்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை குவிந்து கிடக்கின்றன. அனைத்து அரசு அலுவலகங்களும் இயக்கமே ஆன்லைன் மயமாக்கப்பட்ட பிறகு ஏதோ ஒரு தவறு நடந்ததால், பல ஆண்டுகளாக அதை சரி செய்யாமல், அதை  சரி செய்ய வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஆன்லைனில் பட்டா கிடைக்க வழிவகை செய்ய செய்ய வேண்டும். அதற்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...