×

தொடர்மழை பெய்ததால் 1000 ஏக்கர் நெற்பயிர் சேதம் வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் வேதனை

வத்திராயிருப்பு, ஜன. 12:  வத்திராயிருப்பு பகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஒரு வருடமாக ஓரளவு மழை பெய்ததால் 7 ஆயிரம் ஏக்கர் வரை விவசாயிகள் விவசாயம் செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு நெல் அறுவடை செய்து அதன் மூலம் விவசாயத்தின் மூலம் பலன் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு காத்திருந்த நெற்கதிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரம்  ஏக்கர் வரை மழையால் வயலிலேயே நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. அறுவடை நேரத்தில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் ேவதனையடைந்துள்ளளனர்.

இதுகுறித்து மாத்தூரைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கம் கூறுகையில், நெல் விவசாயத்தில் பலன் கிடைக்கும் என்பதற்காக இருக்கின்ற நகைகளை அடமானம் வைத்தும், தனியாரிடம் வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாயம் செய்தேன். நெல் அறுவடை செய்தால் இருக்கின்ற கடன்களை ஓரளவு அடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தொடர் மழையால் நெல் அறுவடைக்கு காத்திருந்த நெற்கதிர்கள் அறுவடை செய்ய முடியாமல் 6 ஏக்கர் நிலத்தில் சாய்ந்து விட்டன. ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தோம். ஆனால், செலவு செய்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் நிர்கதியாய் நிற்கின்றேன். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
வத்திராயிருப்பு பகுதியில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்ெகடுப்பு நடத்தி அவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ