×

சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் தமிழக அரசு சுற்றுச்சூழல் பூங்கா, குளங்கள் அமைக்க அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் நிலத்தில், மழைநீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் இந்த திட்டத்தை பாராட்டியுள்ளது.

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும், குத்தகையை ரத்து செய்து நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்ததை எதிர்த்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக மக்களின் நலன் கருதி கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி ரேஸ் கிளப்புக்கு சொந்தமான இடத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் 470 பேர் இறந்தனர். 40 லட்சம் பேர் உடைமைகளை இழந்தனர். 18 லட்சம் பேர் இடமாற்றம் செய்தனர். 17 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும் போது இதுபோன்ற திட்டங்கள் தேவை.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழல் சம நிலை ஏற்படுவதோடு, காற்று மாசுவை குறைக்க இயலும். காற்று மாசு என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுல்ல. அது பொதுமக்களின் உடல் நலன் சார்ந்த பிரச்னையாகும். சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போலாகும். எனவே, தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அரசு சுற்றுச்சூழல் பூங்கா, குளங்கள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.

 

Tags : Tamil Nadu government ,Chennai ,Guindy Race Club ,Madras High Court ,Race Club ,Chennai Guindy ,Chennai Guindy… ,
× RELATED சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி...