- திருவண்ணாமலை தீபம்
- சென்னை
- நெடுஞ்சாலை அமைச்சர்
- ஈ.வி.வேலு
- கார்த்திகை தீபம்
- கார்த்திகை தீபத் திருவிழா
- திருவண்ணாமலை
சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரத்தியேக கார்த்திகை தீபம் செயலி நிறுவப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 3ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திப்பட்டு வருகிறது.
மேலும் மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்தங்களில் பக்தர்களுக்காக குடிநீர், மின் விளக்குகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: கார்த்திகை தீபத்திருவிழா நாளன்று பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பிரத்தியேக ஆன்ட்ராய்டு செயலி நிறுவப்பட்டுள்ளது. இந்த செயலியில் பக்தர்கள் எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக பொது தகவல்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் நிறுத்துமிடங்கள், மருத்துவ முகாம்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், காவல் சேவை மையங்கள், கழிவறைகள், அவசர உதவி 108 ஆம்புலன்ஸ், அவசர மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை இருக்குமிடங்கள் குறித்தும், அவசர தேவைக்கான கட்டுபாட்டு உதவி எண்கள், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள், கோயில் பற்றிய விவரங்கள் ஆகியவைகளை இந்த செயலில் அறிந்துகொள்ளலாம்.
ரூ.10 குறைந்தபட்ச கட்டணத்தில் 200 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் தீப நாளன்று இயக்கப்பட உள்ளன. அதற்கேற்ப தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகம், மாடவீதி மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
24 இடங்களில் காவலர் கண்காணிப்பு கோபுரங்கள், 61 இடங்களில் உதவி மையங்கள், 454 இடங்களில் பொது அறிவிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள கார்த்திகை தீபம் செயலியை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட வழங்கல் அலுவலர் சதீஸ் குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானவேல், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
