புதுடெல்லி: எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவை முடங்கியது. இதே விவகாரத்தில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் அமளி செய்வதை தவிர்க்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ள இக்கூட்டத்தொடரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டிப்புடன் வலியுறுத்தி இருந்தன. இந்நிலையில், மக்களவையில் காலை 11 மணிக்கு தொடங்கியதும், எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
வெறும் 12 நிமிடங்களே நடந்த பூஜ்ஜிய நேரத்தில் அமளிக்கு இடையே ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை மானிய கோரிக்கை மசோதா, மணிப்பூரில் ஜிஎஸ்டி திருத்தங்களை செயல்படுத்துவதற்கான மசோதா, புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி விதிக்கும் ஒன்றிய கலால் திருத்த மசோதா, பான் மசாலா உற்பத்திக்கான புதிய செஸ் வரி விதிக்கும் சுகாதார பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மசோதா ஆகிய 4 மசோதாக்களை தாக்கல் செய்தார். அமளி காரணமாக பிற்பகல் 2.20 மணிக்குள் 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் தொடங்கிய பிறகும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு நடுவே மணிப்பூரில் ஜிஎஸ்டி திருத்தங்களை செயல்படுத்தும் மசோதா சில நிமிட விவாதத்துடன் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை முதல் முறையாக புதிய துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. அவரை பிரதமர் மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் வரவேற்று பேசினர்.
அதைத் தொடர்ந்து, எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் விதி 267ன் கீழ் அளித்த 9 தீர்மானங்களை அவைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்த நிலையில், எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முறையிட்டன. அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘அனைத்து கட்சி கூட்டத்திலும், அலுவல் ஆலோசனை கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த விஷயத்தையும் அரசு குறைத்து மதிப்பிடவில்லை. அதைப் பற்றி ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறி உள்ளோம்.
எனவே எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்த அரசு தயங்கவில்லை. ஆனால் அதை இப்போதே நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம்’’ என்றார்.
அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாததால் பல எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இவ்வாறு குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே எஸ்ஐஆர் விவகாரம் புயலை கிளப்பியது.
நாடாளுமன்றம் நாடகமேடை அல்ல: முன்னதாக, கூட்டத்தொடரில் பங்கேற்ற வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நாம் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றம் நாடக மேடை அல்ல, அது விவாதம் நடத்துவதற்கான இடம். கடந்த சில காலமாக, நமது நாடாளுமன்றம் தேர்தல்களுக்கான அனல் பறக்கும் களமாகவோ அல்லது தோல்விக்குப் பிறகு விரக்தியடைய ஒரு வழியாகவோ பயன்படுத்தப்படுகிறது. பீகார் தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. அவர்களால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.
தோல்வி என்பது இடையூறுகளை உருவாக்குவதற்கான களமாக இருக்கக்கூடாது. வெற்றி ஆணவமாகவும் மாறக்கூடாது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் விளையாடி வரும் விளையாட்டுகளை மக்கள் இனி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் உத்தியை மாற்ற வேண்டும். அவர்களுக்கு சில குறிப்புகள் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத்தின் நோக்கத்தை உணர்ந்து தோல்வியின் விரக்தியிலிருந்து வெளியே வர வேண்டும். அமளி செய்வதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.
* லட்சுமண ரேகையை பின்பற்ற வேண்டும்
மாநிலங்களவை தலைவராக தனது முதல் உரையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘தலைவராக இருந்தாலும், உறுப்பினராக இருந்தாலும் தேசத்திற்கான நமது பொறுப்புகளை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவையில் உரையாற்றுவதில், மாநிலங்களவை விதிகளுடன் இந்திய அரசியலமைப்பு இணைந்து லட்சுமண ரேகையை தீர்மானிக்கின்றன. இந்த லட்சுமண ரேகைக்குள் தான் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினர்களின் உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும். உங்கள் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க நான் எப்போதும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’’ என்றார்.
