- ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி
- தென் ஆப்பிரிக்கா
- ருத்ரா
- தாந்தவம்
- சென்னை
- உலகக் கோப்பை ஜூனியர் ஆண்களுக்கான
- ஜெர்மனி
- அயர்லாந்து
- கனடா
- உலகக் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள்
சென்னை: உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நேற்று, ஜெர்மனி அணி, 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியையும், தென் ஆப்ரிக்கா 9-1 என்ற கோல் கணக்கில் கனடாவையும் வென்றன.
உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டிகள், சென்னை, மதுரை நகரங்களில் நடந்து வருகின்றன. மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஜெர்மனி-அயர்லாந்து அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் ஜெர்மனி அணியின் ஆதிக்கமே காணப்பட்டது. ஆக்ரோஷமாக ஆடிய அந்த அணியின் வான் ஜெர்சம் ஜோனாஸ், போட்டியின் 4வது நிமிடத்தில் முதல் கோலடித்து அசத்தினார்.
தொடர்ந்து, ஜெர்மனியின் கிளாண்டர் பால் 34வது நிமிடத்திலும், வான் ஜெர்சம் ஜோனாஸ் 50வது நிமிடத்திலும் கோல்களை போட்டனர். சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த அயர்லாந்து அணியின் டேல் சாமுவேல், 51வது நிமிடத்தில் முதல் கோல் போட்டார். இருப்பினும், ஜெர்மனியின் கோஸல் லூகாஸ் 52வது நிமிடத்திலும், பிரான்ஸ் கிறிஸ்டியன் 53வது நிமிடத்திலும் மேலும் 2 கோல்களை அடித்து பரவசப்படுத்தினர். அதனால், 5-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது. மதுரையில் நேற்று நடந்த 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா – கனடா அணிகள் மோதின.
இப்போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய தென் ஆப்ரிக்கா வீரர்கள், 9-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடினர். சென்னையில், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஹாக்கிப் போட்டியில், ஜப்பான்-நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டி துவங்கி 5வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் இலெர்ப்ரன் ஸ்காட் முதல் கோலடித்தார். இருப்பினும், ஜப்பான் வீரர்கள் டோயா கியோயா 6ம் நிமிடத்திலும், மோரி மாட்சுகி 15வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடித்து தமது அணியை முன்னிலைப் படுத்தினர். பின்னர் நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.
