×

கிராமமக்கள் எளிதாக புகார் அளிக்க விழிப்புணர்வு காவலர் திட்டம் அறிமுகம்

வாடிப்பட்டி, ஜன.12:  முதன்முறையாக வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில், கிராம விழிப்புணர்வு காவலர் திட்டத்தை தென் மண்டல ஐஜி முருகன் துவக்கி வைத்தார். வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக செம்மினிபட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, ராமையன்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களை இணைக்கும் வகையில் கிராம விழிப்புணர்வு காவலர் திட்டம் உருவாக்கப்பட்டது. செமினிப்பட்டி கிராமத்தில் மாவட்ட எஸ்.பி.சுஜித்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தென் மண்டல ஐஜி முருகன் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், ஏ.டி.எஸ்.பிக்கள் வனிதா,கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கிராம விழிப்புணர்வு காவலரை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றிய தென்மண்டல ஐஜி முருகன் இப்பகுதி மக்கள் தங்கள் பகுதி குறைகளை காவல் நிலையம் சென்று தெரிவிக்க முடியாவிட்டாலும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள கிராம விழிப்புணர்வு காவலராக நியமிக்கப்பட்டுள்ள வாடிப்பட்டி காவல்நிலைய காவலர் ரெங்கநாதனிடம் தெரிவித்தால் அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்களின் புகார் குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பார். மதுரை மாவட்டத்தில் முதலாவதாக வாடிப்பட்டி காவல் நிலையம் மூலம் துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டம் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். ஏற்பாடுகளை சமயநல்லூர் டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆலோசனையின்படி வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கச்சைகட்டி கூட்டுறவு வங்கி தலைவர் உங்குச்சாமி, ஊராட்சி தலைவர் ஆலயமணி மற்றும் திரளான கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது