×

படித்த இளைஞர்களுக்கு கடன் தர மறுக்கும் வங்கிகள் நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் வந்து கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். பின்னர் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சூரியபிரகாஷ் கூறுகையில், ‘திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தின் ஆலோசனைப்படி படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழில் கடன் பெற விண்ணப்பித்து உள்ளோம். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தபால் மூலம் வழங்கப்படும் கடிதத்தை நமது மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பரிசீலிப்பதில்லை. அதன் கிளை மேலாளர்களும் அந்த கடிதத்தை வாங்கி பார்ப்பதே இல்லை. இதனால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கடன் பெற முடியாமலும், சுயதொழில் செய்ய முடியாமலும் அவதிப்படுகின்றனர். வங்கி மேலாளர்கள் காட்டும் அலட்சியம் படித்த இளைஞர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவதுடன், சுயதொழில் முனைவோராக ஆர்வம் காட்டாத நிலையை உருவாக்குகிறது.

மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க அணுகினால், வங்கி கிளை மேலாளரிடம் அனுமதி பெற்று வருமாறு கூறுகிறார்கள். மாவட்டத்தில் 90 சதவீதம் வங்கி மேலாளர்கள் சொல்லும் பதில், புதிய தொழில் தொடங்கினால் மானிய கடன் அளிக்க முடியாது என்பதுதான். மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்துள்ள ஸ்டாக் போர்ட்ஸ் கமிட்டி ஜெனரல் மேனேஜரால் தபால் மூலம் வழங்கப்படும் கடிதத்தை எந்த வங்கி மேலாளரும் வாங்கி படிப்பதே இல்லை. எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என்றார்.மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags : Banks ,Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...