டேட்டா தர்றது இருக்கட்டும் முதல்ல லேப்டாப் தாங்க... பழநியில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

பழநி, ஜன. 12: தமிழக அரசு பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் கடந்த 2017- 18ம் கல்வியாண்டில் இருந்து பெரும்பாலான மாணவ- மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுமென அறிவித்திருந்தார். கொரோனா காரணமாக தற்போது பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளே அதிகளவு நடக்கிறது. ஏழை மாணவர்கள் பலர் செல்போன் வாங்க வசதியில்லாத நிலையில் உள்ளனர். மேலும் அரசின் இலவச லேப்டாப்பும் கிடைக்காததால் மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்வதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இலவச லேப்டாப் வழங்க கோரி நேற்று பழநி கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பொன்மதி தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் முகேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஜீவதுரை, மாவட்டக்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் உடனே இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷமிட்டனர்.

Related Stories:

>