×

ஈடி புகாரில் டெல்லி போலீஸ் நடவடிக்கை நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் சோனியா, ராகுல் மீது புதிய வழக்கு

 

புதுடெல்லி: ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த பத்திரிகையை நடத்திய ஏஜெஎல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அதன் கடனுக்கு ஈடாக ரூ.2,000 கோடி சொத்துக்கள் வெறும் ரூ.50 லட்சத்தில் யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. யங் இந்தியா நிறுவனத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலா 38 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக பாஜ மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கடந்த 2014ல் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை பரிசீலிப்பது தொடர்பான வழக்கில் வரும் 16ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் புகாரின் அடிப்படையில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரசின் மூத்த தலைவர்கள் சுமன் துபே, சாம் பிட்ரோடா மற்றும் யங் இந்தியா, டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் 3ம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுதொடர்பாக தகவல் நேற்று வெளியாகி உள்ளது. இந்த புதிய எப்ஐஆரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120B (குற்றச் சதி), 403 (நேர்மையற்ற சொத்து மோசடி), 406 (குற்றவியல் நம்பிக்கை மீறலுக்கான தண்டனை) மற்றும் 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

* மோடி, அமித்ஷாவின் பழிவாங்கும் செயல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘மோடி-அமித்ஷா ஜோடி காங்கிரசின் தலைமைக்கு எதிராக துன்புறுத்தல், மிரட்டல், பழிவாங்கும் நோக்கத்துடன், குறும்புத்தனமான அரசியலை தொடர்கின்றனர். இந்த ஜோடி இந்திய தேசிய காங்கிரசின் உயர் தலைமைக்கு எதிராக துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் தங்கள் குறும்பு அரசியலைத் தொடர்கிறது. மிரட்டுபவர்கள்தான் பாதுகாப்பற்றவர்களாகவும் பயந்தவர்களாகவும் உள்ளனர். நேஷனல் ஹெரால்டு விவகாரம் முற்றிலும் போலியான வழக்கு. இறுதியில் நீதி வெற்றி பெறும். சத்யமேவ ஜெயதே’’ என கூறி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஒயினும் புதிதல்ல, அதன் பாட்டிலும் புதிதல்ல, கண்ணாடி கோப்பை கூட புதியதல்ல. எந்த பண பரிவர்த்தனையும் நடக்காத, அசையா சொத்துகள் கைமாற்றப்படாத, பணமோசடி கண்டுபிடிக்கப்படாத ஒரு தந்திரமான அதிசய வழக்கு இது’’ என்றார்.

* பாஜ மறுப்பு

ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டியில், ‘‘நேஷனல் ஹெரால்டு விவகாரத்தை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிற காங்கிரசின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. இந்த விவகாரம் 2008ம் ஆண்டுக்கு முந்தையது. சட்ட விதிகளின் கீழ் அமலாக்கத்துறை வலியுறுத்தியதன் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சொத்து மதிப்புகளை குறைத்து காட்டி, ரூ.50 லட்சம் கொடுத்து பல கோடி சொத்துக்கள் மாற்றப்பட்டுள்ளன. இது ஒரு கொள்ளை வழக்கு. சட்டம் அதன் வேலையை செய்கிறது. இதில் காங்கிரசின் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.

Tags : Delhi Police ,ED ,Sonia ,Rahul ,National Herald ,New Delhi ,Jawaharlal Nehru ,AJL ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிகளால் பீகார் 75 தொகுதிகளில் முடிவுகள் மாறியது: பரகலா பிரபாகர்