×

டிட்வா புயலின் வேகம், மழையும் குறைந்ததால் சென்னையில் விமானங்கள் வழக்கம்போல் இயங்கின: யாழ்ப்பாணம் விமானங்கள் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வேகம் வேகம் எடுத்து, உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அதோடு தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம், டிட்வா புயலாக உருவாகியதால் தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. அதோடு புயல் சென்னையை நோக்கி நகர்வதாக கூறப்பட்டதால், நேற்று முன்தினம் முழுவதும் சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள், வரும் விமானங்கள் மற்றும் பெங்களூரு-தூத்துக்குடி, புதுச்சேரி-ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 54 வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக சிறிய ரக விமானங்களான ஏடிஆர் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
மழை, புயல் மிரட்டல் தொடர்ந்ததால் நேற்று இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிறிய ரக விமானங்களான ஏடிஆர் விமானங்கள் நேற்றும் ரத்தாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது மழையின் வேகம் ஓரளவு குறைந்ததோடு, இந்திய வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே, ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், சென்னை புறநகர் பகுதிகள் ஓரளவு பாதிப்பிலிருந்து தப்பித்ததாக தெரிய வருகிறது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட விமானங்கள் நேற்று வழக்கம் போல் இயங்க தொடங்கின. ஆனால் சென்னை -யாழ்ப்பாணம்-சென்னை ஆகிய இரண்டு விமானங்கள் மட்டும் நேற்றும் ரத்து செய்யப்பட்டன. விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு நேரம் அறிந்து பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Tags : Chennai ,Cyclone Titva ,Jaffna ,northeast ,Tamil Nadu ,southeast Bay of Bengal ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...