×

பச்சிளம் குழந்தைகளை சீரழித்த கொடூரம்; அமெரிக்காவில் காமுகனுக்கு 965 ஆண்டுகள் சிறை: மனைவிக்கும் 30 ஆண்டு தண்டனை விதிப்பு

அலபாமா: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த ஜேசன் ஹட்சன் (48) என்பவர் இணையத்தில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றியது தொடர்பாகக் குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. இதில் ஜேசன், 2 வயதுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களைச் சவுக்காலும், நெருப்பாலும் சுட்டு சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மேலும், இந்தக் கொடூரச் செயல்களை அவர் வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்ததும், ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. சொந்தக் குழந்தையையே அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக 84 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு மற்றும் குழந்தைகளைத் துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக நீதிபதி அமண்டா பாக்ஸ்லி அவருக்கு மொத்தம் 965 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் பேசும்போது, ‘அவன் ஒரு அரக்கன்;

இனி அவன் என் வாழ்க்கையில் தலையிட முடியாது’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இதற்கிடையே, இந்தக் கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த ஜேசனின் மனைவி ஃபாரென் ஜில் ஹட்சனுக்கும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Pachilam ,Kamugan ,United States ,ALABAMA ,JASON HUDSON ,ALABAMA, UNITED STATES ,Jason ,Chachilam ,
× RELATED தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள்...