×

அமெரிக்காவில் குடும்ப விழாவில் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி: 10 பேர் படுகாயம்; கொலையாளி தப்பியோட்டம்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழா ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டாக்டன் நகரில் அமைந்துள்ள தனியார் விருந்து மண்டபத்தில் குடும்ப நிகழ்ச்சி ஒன்று உற்சாகமாக நடைபெற்று வந்தது. அப்போது அங்கு திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர், கூட்டத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். லூசில் அவென்யூ பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சான் ஜோவாகின் கவுண்டி ஷெரிப் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

காயமடைந்தவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஷெரிப் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஹீதர் ப்ரெண்ட் கூறுகையில், ‘இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிகிறது, தற்போது மிகக்குறைந்த தகவல்களே கிடைத்துள்ளன’ என்று தெரிவித்தார்.

Tags : United States ,California ,California, United States ,Stockton ,
× RELATED தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள்...