பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி. செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன. 12: ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்க மாநில துணை தலைவியும், ஈரோடு மாவட்ட தலைவியுமான சசிகலா தலைமை தாங்கினார். இதில், 2015ம் ஆண்டு மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் போட்டி தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 13 ஆயிரம் செவிலியர்கள், 2 ஆண்டு ஒப்பந்த முறை பணி நிறைவடைந்ததும் கால முறை ஊதியத்தில் நியமிக்கப்படவில்லை.

2 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்யும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு, அவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பலன்கள் வழங்க வேண்டும். ஒப்பந்த முறையில் பணியாற்றும் எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவிகள் கோவை சிவப்பிரியா, உதகை இந்திரா நெல்சன், திருப்பூர் விமலா, சேலம் சங்கீதா, கரூர் மாவட்ட தலைவர்கள் அன்பரசன், நாமக்கல் விஜயகுமார் ஈரோடு, திருப்பூர், கோவை, உதகை, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன், துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

Related Stories:

>