×

அரசு கொள்முதல் மையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கோபி, ஜன. 12: தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு அடுத்து ஈரோடு மாவட்டத்தில்தான் அதிகளவு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசன பகுதியில் மட்டும் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக கோபி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் விதை நெல் ரகங்களுக்கு நல்ல முளைப்பு திறன் இருப்பதால், தமிழகம் முழுவதும் இங்கு இருந்தே விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்த பின், விவசாயிகளை ஏமாற்றுவதும், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தல் போன்ற காரணங்களால் பாசன பகுதியில் அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் குறைந்த அளவே நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசன பகுதியில் மட்டும் 32 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்முதல் மையங்களில் விற்பனைக்காக நெல் கொண்டு வரும் விவசாயிகள், ஆதார் கார்டு, கிராம நிர்வாக அலுவலர் சான்று உள்ளிட்ட 7 வகையான ஆவணங்கள் அடிப்படையில் 17 சதவீத ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுவதால், விவசாயிகள் ஆர்வமுடன் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோபி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 15 முதல் 20 நாட்கள் வரை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு மண்டல மேலாளர் பானுமதி நேற்று புதுக்கரைபுதூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தில் ஆய்வு செய்தபோது, பல விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்கள் முளைத்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு புதுக்கரைபுதூரில்நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆயிரம் முட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதனால், ெநல்லை விற்பனை செய்ய டோக்கன் வாங்கியதில் இருந்து 15 முதல் 20 நாட்கள் வரை ஆகிறது. நெல்லை ஒரே இடத்தில் கொட்டி வைத்து இருந்தால், முளைத்து விடும். இதனால், நாள்தோறும் இடம் மாற்றி கொட்ட வேண்டிய நிலை உள்ளது. இதற்காக எங்களுக்கு கூடுதல் செலவு ஆகிறது. உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

இது குறித்து  மண்டல மேலாளர் பானுமதி கூறுகையில், கடந்த ஆண்டு புதுக்கரைபுதூரில் இரண்டு நெல் கொள்முதல் மையங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டதால், நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு மையம் புதுக்கரைபுதூரிலும் மற்றொரு மையம் கணபதிபாளையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 17 சதவீத ஈரப்பதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதால், வயலில் இருந்து வரும் நெல் சில நாட்கள் காய வைத்தால் மட்டுமே குறிப்பிட்ட ஈரப்பதத்துடன் இருக்கும். நாட்கள் அதிகரிக்கும்போது நெல் முளைத்து விடுகிறது. உடனடியாக கோபி பகுதியில் எந்தெந்த மையங்களில் 2 ஆயிரம் மூட்டை நெல்  கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளதோ, அப்பகுதியில் உடனடியாக நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.

Tags : purchase ,Government Procurement Center ,
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு