மும்பை: சாவர்க்கரை அவமதித்ததாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் யூடியூப் வீடியோவை ஆதாரமாக ஏற்க முடியாது என்று சிறப்பு கோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்தார். கடந்த 2013ம் ஆண்டு லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் குறித்து பேசினார்.
ராகுல், சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி சாவர்கரின் சகோதரரின் பேரன் சத்யகி சாவர்க்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமோல் ஷிண்டே விசாரணை நடத்தி வருகிறார்.
வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி பேச்சுக்கள் அடங்கிய சிடி கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சிடியில் ஆதாரம் ஏதும் இல்லை. இதைப்பார்த்து நீதிபதி கடும் அதிருப்திக்கு ஆளானார். சட்டப்பிரிவு 65-பின் கீழ் இந்த வீடியோவை தாக்கல் செய்துள்ளதாகவும், சான்றிதழ் இல்லாமல் இவ்வாறு தாக்கல் செய்யப்படும் யூடியூப் வீடியோக்கள் சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி அதனை நிராகரித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
