×

கர்நாடகா அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சித்தராமையா – டி.கே.சிவகுமார் சந்திப்பு: 40 நிமிடம் காலை உணவருந்தி ஆலோசனை, எந்த முரணும் இல்லை என்று கூட்டாக பேட்டி

பெங்களூரு: மாநிலத்தில் நிலவும் அதிகாரப் போட்டிக்கு மத்தியில் சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் நேற்று காலை ஒன்றாக உணவருந்தி சுமார் 40 நிமிடங்கள் ஆலோசித்தனர். கர்நாடகாவில் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்போது, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் முதல்வர் பதவி கேட்க, அப்போது இரண்டரை ஆண்டுக்குப் பிறகு டி.கே.சிவகுமாரை முதல்வராக்குவதாகக் கூறி அவரை சமாதானப்படுத்தி, சித்தராமையாவை முதல்வராக்கியதாக தகவல் வெளியானது.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை முதல்வராக்குவதாகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று டி.கே.சிவகுமார் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலமுறை கூறிவிட்டார். இருவர் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுவதால் கட்சி மேலிடம் தர்மசங்கடமான நிலையில் உள்ளது. டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரையும் டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் பேசி முடிவு செய்யும் என கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார்.

இருவர் இடையே உள்ள மோதல் அதிகரித்ததால் கடும் அதிருப்தியடைந்த கட்சி மேலிடம், இருவரும் டெல்லிக்கு வருவதற்கு முன், சமாதானம் ஆகி நல்லுறவையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும் விதமாக சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தியது. கட்சி மேலிட உத்தரவின் பேரில், முதல்வரின் காவேரி இல்லத்தில் நேற்று காலை முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டு சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அந்த சந்திப்பு குறித்து சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது பேசிய முதல்வர் சித்தராமையா கூறியதாவது: எனக்கும் டி.கே.சிவகுமாருக்கும் எந்த முரணும் கிடையாது. எதிர்காலத்திலும் அப்படி எதுவும் இருக்காது. கட்சி மேலிடம் சொல்வதை நாங்கள் கேட்போம். டி.கே.சிவகுமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். நாங்கள் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டோம்.

சில தேவையற்ற குழப்பங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசினோம். 2028 சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியமானது. 2028ஆம் ஆண்டும் கர்நாடகாவில் காங்கிரசை ஆட்சிக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்தோம். கடந்த காலங்களில் துணை முதல்வரும் நானும் இணைந்து பணியாற்றியது போல, எதிர்காலத்திலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். எனக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே எந்த முரணும் கிடையாது. இனியும் இருக்காது.

கட்சி மேலிடம் சொல்வதைக் கேட்டு நடப்பது என்று இருவரும் முடிவு செய்துள்ளோம். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் பணியில் ஈடுபடுமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. நாளை (இன்று) முதல் எந்த குழப்பமும் இருக்காது. சில குழப்பங்கள் எழுந்தது உண்மைதான். சில ஊடக அறிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

சில எம்.எல்.ஏக்கள் டெல்லிக்குச் சென்றிருக்கலாம். அதற்காக அவர்கள் தலைமையை எதிர்க்கிறார்கள் என்று அர்த்தமல்ல. மேலிடம் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம். எங்களது ஒற்றுமை தொடரும். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த முரணும் இல்லை. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

* மேலிட உத்தரவின்படி நடந்து கொள்வோம்
துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்தபடி செயல்படுகிறோம். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் எங்கள் கடமை. அந்தவகையில், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. மேலிட முடிவு, வழிகாட்டுதலின்படி நாங்கள் ஆட்சி செய்கிறோம்.

சித்தராமையா அரசாங்கத்தில் நான் தாமதமாகத்தான் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டேன். அப்போதும் கூட நான் தனி குழுவாக செயல்படவில்லை. எப்போதும் அப்படி செயல்படுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சி மேலிடம் சொல்வதைக் கேட்டு செயல்படுவோம். 2028 சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு நாங்கள் பாடுபடுவோம்’ என்றார்.

Tags : Karnataka ,Siddaramaiah ,DK Shivakumar ,Bengaluru ,Congress government ,Chief Minister ,2023 assembly elections ,Siddaramaiah… ,
× RELATED ஒடிசாவில் டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண் : ஆயுதங்கள் ஒப்படைப்பு!