சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17ம் தேதி முதல் துவங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், முதல்வரின் உத்தரவுன்படி, மின்சாரத்துறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சென்னை மாநகர மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு மையமான மின்னகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
* அதன் விவரம் பின்வருமாறு: ஏப்.1ம் தேதி முதல் நவ.25ம் தேதி வரை மேற்கொண்ட பணிகள்
பருவமழையை எதிர்கொள்ள 3,279 மின்பெட்டிகள் தரைமட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. 6,822 இடங்களில் வெளியே தெரியும் நிலையில் உள்ள மின்வடங்கள் பாதுகாப்பாக பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளன.
1,543 கி.மீ. பழைய மின் கம்பிகள் மாற்றப்பட்டும், 1,685 கி.மீ. மின் கம்பிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 2,987 துணைமின் நிலையங்கள், 2,079 பழுதடைந்த மின் பெட்டிகள், 39,310 உயர் மற்றும் தாழ்வழுத்த பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் 31,739 சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்கள் சரிசெய்தல், 2,659 மின் பெட்டிகள் பராமரிப்பு, 65,111 மின்மாற்றி கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பிற பராமரிப்பு பணிகள் உள்பட 15,22,490 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* ஆயத்தப்பணிகள் / தளவாட பொருட்கள் மற்றும் உபகரணங்கள்:
3,30,507 மின் கம்பங்கள், 9,568 கி.மீ. மின் கம்பிகள் மற்றும் 13,029 விநியோக மின்மாற்றிகள் முந்தைய தரவுகளின் அடிப்படையில் களத்தில் தற்போது கையிருப்பில் உள்ளன. போதுமான அளவு மின் கம்பங்கள், மின் கம்பிகள், விநியோக மின்மாற்றிகள் மற்றும் இதர தளவாடப் பொருட்கள் அனைத்து மின் பகிர்மான வட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேசிபி, கிரேன்கள் உள்ளிட்ட கனரக இயந்திரங்களை வாடகை அடிப்படையில் தயார் நிலையில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரம் வெட்டும் உபகரணங்கள், பவர் ஹேக்ஸா, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற கருவிகள் பயன்பாட்டு நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பணியாளர் மற்றும் அதிகாரிகள் தயார்நிலை விவரம்
மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவன கட்டுப்பாட்டு மையம் மற்றும் சென்னை மாநகரட்சி கட்டுப்பாட்டு மையத்திற்கு சுழற்சி முறையில் முறையே கடந்த அக்.1ம் தேதி மற்றும் அக்.22ம் தேதி முதல் மின்சார விநியோக ஒருங்கிணைப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனர். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் களப்பொறியாளர்கள் மற்றும் பிற அரசு துறைகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வண்ணம் 24 மணி நேரமும் இயங்கும் “மின்னகம்“ (94987 94987) சேவை மையம் பயன்பாட்டில் உள்ளது.
சென்னையில் உள்ள 5 மின்பகிர்மான வட்டங்களில் தலா 200 களப் பணியாளர்களும் மற்றும் 750 ஒப்பந்த தொழிலாளர்களும் அடையாளம் காணப்பட்டு, அவசர காலங்களில் சென்னைப் பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளுக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளனர். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், ஒரு கோட்டதிற்கு 2 எண்ணிக்கையில் பதினைந்து பேர் கொண்ட குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த குழு வாகனம், கருவிகள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் அந்தந்த பிரிவுகளில் இருந்து விரையும். தேவையின் அடிப்படையில், இரண்டாவது குழுவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் செல்லும். தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின்வடங்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக கண்டறியவும் மற்றும் சீர் செய்யவும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயரழுத்த மின்கோபுரங்கள் மற்றும் மின்கடத்திகளில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய சிறப்பு தொழில்நுட்ப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* மற்ற ஆயத்த நடவடிக்கைககளின் விவரம்
அவசர காலங்களின் போது மறுசீரமைப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள மின்வாரியத்தின் 99 எண்ணிக்கை வாக்கி டாக்கி கருவிகள் மற்றும் சென்னை மாநகராட்சியிலிருந்து வழங்கப்பட்ட 50 எண்ணிக்கை வாக்கி டாக்கி கருவிகள் களப்பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சி, ஊடகங்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய அறிவிப்புகள் மற்றும் “சேதமடைந்த மின் கம்பிகள் மற்றும் சாய்ந்த மின்கம்பங்களை “தொடாதே/தொட அனுமதிக்காதே” என்பது போன்ற பாதுகாப்புக் குறிப்புகள் பற்றிய விரிவான விளம்பரம் நுகர்வோருக்கு அளிக்கப்படுகிறது.
மின்சேவைகள், மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின்தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
